Published : 20 May 2024 05:45 AM
Last Updated : 20 May 2024 05:45 AM

பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப நவீன பொது கழிப்பறைகளை 15 மண்டலங்களிலும் கட்ட மாநகராட்சி திட்டம்

சென்னை: பெருகி வரும் மக்கள்தொகை, வெளியில் வந்து செல்லும் மக்களுக்கு ஏற்ப சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் நவீன பொதுக்கழிப்பறைகளை கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தற்போதைய நிலவரப்படி 547 இடங்களில் கான்கிரீட் கட்டிடங்களில் பழைய கழிப்பிடங்கள் இயங்கி வருகின்றன. தூய்மை இந்தியா இயக்க நிதியில் 445 இடங்களில் நவீன கழிப்பிடங்களை இளஞ்சிவப்பு நிறத்தில் நிறுவி வருகிறது.

இத்திட்டத்தில் மேலும் புதிதாக கழிப்பிடங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இவற்றில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கழிவறைகள் இருக்கைகள் கொண்டுள்ளன. 300-க்கும் மேற்பட்ட சிறுநீர் கழிப்பிட வசதிகளும், ஏற்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை மெரினா கடற்கரை மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் வால்டாக்ஸ் சாலை ஆகிய இடங்களில் சிறப்பு திட்டத்தின் கீழ் மாநகராட்சி சார்பில் நவீன கழிவறைகள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. அவற்றை தூய்மையாக பராமரிக்கும் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது.

எல்இடி விளக்கு வசதி, 24 மணி நேரமும் தண்ணீர் வசதி, தூய்மை பணியாளர் சேவை அங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் அண்மையில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது, நவீன கழிவறைகளை முறையாக தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சி சார்பில் ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை மண்டலத்தில் மெரினா கடற்கரை ஆகியவற்றில் கழிவறைகளை நவீனப்படுத்துவது, புதிய நவீன பொதுக்கழிவறைகளை கட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இதன்படி, 194 அமைவிடங்களில் உள்ள பொதுக்கழிவறைகளில் 2166 இருக்கைகளில் சிறு குறைபாடுகள், 88 அமைவிடங்களில் பெரிய குறைபாடுகள் கண்டறியப்பட்டன. 90 அமைவிடங்களில் புதிதாக நவீன கழிப்பறைகள் அமைத்து அதில் 662 இருக்கைகள் அமைக்க திட்டமிடப்பட்டது. மொத்தம் 372 அமைவிடங்களில் 3,270 இருக்கைகள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை 1032 இருக்கைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. 74 இருக்கைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. மீதம் உள்ள பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

புதிதாக மெரினா வளைவு சாலை, கலங்கரை விளக்கம், பிராட்வே ஆகிய பகுதிகளில் கழிப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் சோதனை அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது.

15 மண்டலங்களிலும் நவீன பொது கழிப்பிடங்களை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பிறகு, அரசிடம் அளித்து நிர்வாக அனுமதி பெறப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x