எல்.முருகன்
எல்.முருகன்

யானைகள் வழித்தட அறிக்கையை அவசர கதியில் அரசு வெளியிடுவது ஏன்? - ஆங்கிலத்தில் இருப்பதற்கும் எல்.முருகன் கண்டனம்

Published on

சென்னை: மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழகம் முழுவதும் 42 யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு, அது தொடர்பான 161 பக்க அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 20 யானை வழித்தடங்களை மத்திய அரசு கண்டறிந்துள்ள நிலையில், தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழு 42 வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக கூறுகிறது. சுற்றுச்சூழல், வனப்பகுதி பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசின் எந்த ஒரு வழிகாட்டு நெறிமுறைகளையும் திமுக அரசு பின்பற்றுவதாகத் தெரியவில்லை.

2000-ம் ஆண்டில் தமிழகத்தில் 25 யானை வழித்தடங்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர் 2017-ல் 18 வழித்தடங்கள், 2023-ல் 20 வழித்தடங்கள் என்று கூறிய நிலையில் இப்போது 42 என்கிறார்கள்.

அடையாளம் காணப்பட்டுள்ள இந்த யானை வழித்தடங்களில் தனியார் விடுதிகள், நெடுஞ்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள், விவசாய நிலங்கள் மட்டுமல்லாது மக்கள் வசிக்கும் பகுதிகளும் உள்ளன. இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டால், இந்தப் பகுதிகள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் சென்றுவிடும். பல தலைமுறைகளாக இங்கு வசிப்பவர்கள் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என கூடலூர் மற்றும் மசினக்குடி கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையை சாதாரண மக்கள் இதை எப்படி படித்து புரிந்து கொள்வார்கள். தமிழக அரசின் அறிக்கையை தமிழில் தயாரிக்க திராணியற்ற திமுக அரசுதான், தமிழ் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, அவசர கதியில் இந்த அறிக்கையை வெளியிட வேண்டிய அவசியம் என்ன, மக்களின் சந்தேகங்களை தீர்க்காமல், அப்பாவி மக்களின் நிலத்தை அபரிக்கும் திட்டத்தை திமுக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். மக்களிடம் நேரடியாக கருத்து கேட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in