Published : 19 May 2024 09:20 AM
Last Updated : 19 May 2024 09:20 AM

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் விழாவில் 10 ஆயிரம் பேருக்கு அசைவ விருந்து

திருமங்கலம் அருகே கரும்பாறை முத்தையா கோயில் திருவிழாவில் அசைவ விருந்துக்காக பிரம்மாண்ட பாத்திரங்களில் தயாரான இறைச்சி குழம்பு.

மதுரை: மதுரை அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கோயில் திருவிழாவில் 10 ஆயிரம் பேருக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.

திருமங்கலம் சொரிக்காம்பட்டி அருகேயுள்ள பெருமாள் கோவில்பட்டியில், காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்கள் மட்டும் பங்கேற்கும் பிரம்மாண்ட அசைவ உணவுத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும்.

இதன்படி நேற்று நடைபெற்ற விழாவில் ஆண் பக்தர்கள் மட்டும்பங்கேற்றனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக கோயிலுக்கு கருப்பு நிற ஆடுகளை வழங்குவர். கோயில் வளாகத்தில் பக்தர்கள் விட்டுச் செல்லும் ஆடுகள், அப்பகுதியில் உள்ள நிலங்களில் மேய்ச்சலுக்குச் செல்லும். சுவாமியே தங்கள் வயலில் இரை தேடுவதாக நம்பும் இப்பகுதி மக்கள், ஆடுகளை விரட்டுவதில்லை. திருவிழாவுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு அனைத்து ஆடுகளையும் சேகரிப்பார்கள்.

நேற்று நடந்த விழாவில் சுவாமிக்கு பொங்கல் வைத்து, 125 ஆடுகள் பலியிடப்பட்டன. மேலும்,2,500 கிலோ அரிசியைப் பயன்படுத்தி சாதம் சமைக்கப்பட்டது. சாதம், இறைச்சியை சுவாமிக்குப் படைத்து சிறப்பு பூஜை நடந்தபின்னர், அன்னதானம் நடைபெற்றது. இதில், பெருமாள் கோவில்பட்டி, சொரிக்காம்பட்டி, கரடிக்கல், மாவிலிப்பட்டி, செக்கானூரணி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆண்கள் பங்கேற்றனர்.

உணவு உண்டபின் இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் செல்வார்கள். ஒரு வாரத்தில் இலைகள் காய்ந்த பிறகே, பெண்கள் கோயிலுக்கு வருவார்கள்.

விழா ஏற்பாட்டாளர்கள் கூறும்போது, “இந்த விழாவில் அனைத்து சமூகத்தினரும் பங்கேற்பர். குழந்தை வரம், வேலைவாய்ப்பு,உடல் ஆரோக்கியத்துக்காக இக்கோயிலில் ஏராளமான பக்தர்கள்வேண்டிக் கொள்வர். அது நிறைவேறியதும் நேர்த்திக் கடனுக்காககருப்பு நிற ஆடுகளை வழங்குவர். ஆண்டுதோறும் ஆடுகளின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளதால், விழாவும் சிறப்பாக நடக்கிறது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x