Published : 16 Apr 2018 11:18 AM
Last Updated : 16 Apr 2018 11:18 AM

ஒரே தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது: காவிரி விவகாரம் குறித்து பிரகாஷ் ராஜ் ட்வீட்

நதியிலிருந்து அரசியலை அகற்றினால் எல்லாம் தானாக சரியாகும் என, காவிரி பிரச்சனை குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.

காவிரி பிரச்சனை குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நீரில் எப்போது அரசியல் கலந்ததோ, அப்போதே காவிரி கறைபடத் தொடங்கியது.

ஒரே தேசத்துக்குள் இருக்கின்ற சகோதர மாநிலங்களால் தண்ணீரை சுமூகமாக பகிர்ந்துகொண்டு நட்போடு இருக்க முடியவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இதற்கு ஓட்டு அரசியல் இன்றி வேறு காரணங்கள் இல்லை.

விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையில் அரசாங்கங்கள் கண்ணாமூச்சி ஆடுவது மக்களை ஏமாற்றும் செயல். ஓட்டுக்காக அரசியல் செய்யும் சுயநலவாதிகளின் சூழ்ச்சியை காவிரியால் கடக்கவே முடியவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுகிற கட்சிகள் தங்களுடைய அரசியல் லாபங்களுக்காக மக்களைப் பிரித்து மக்களை வாக்கு வங்கியாக பயன்படுத்துகின்றனர்.

அரசியல் தலைவர்கள் தீர்வு தேடுவதில் அக்கறை காட்டாமல் உணர்ச்சிகளைத் தூண்டி கலவரம் செய்து குழம்பிய குட்டையில் அதிகார மீன்களை பிடிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.

காவிரியை வைத்து கலவரம் செய்கிறவர்கள் யாரும் காவிரி ஆற்றில் மணல் அள்ளும் மாஃபியாக்களுக்கு எதிராக சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடுவதில்லை.

இனிமேலும் இந்த நதிநீர் அரசியல் தொடர்ந்தால் அது மீட்க முடியாத இழப்புகளைத் தரும் பேராபத்தில் முடியும்.

கேள்வி மட்டுமே கேட்டுக்கொண்டிருக்காமல் தீர்வு தேடுகிற ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவதும் அவசியமாகிறது. காவிரி நீர் பங்கீட்டில் இருக்கும் உண்மையான பிரச்சனைகளையும், அவற்றுக்கான நடைமுறைத் தீர்வுகளையும் தமிழக மற்றும் கர்நாடக மக்களுக்கு விளக்குவது அவசியமாகிறது.

இரு தரப்பிலும் சமூக அக்கறை கொண்ட வல்லுநர்களின் துணையுடன் ஒரு ஆவணப்படம் எடுக்கும் முயற்சியை Just asking Foundation எடுக்கிறது. உண்மைகள் மக்களைச் சேர அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியம்.

ஒரு தாய்ப்பால் குடித்த சகோதரர்கள் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது என்பார்கள். ஒரு நதிநீரைக் குடித்து, அதில் விவசாயம் செய்து வாழ்ந்த மக்கள் சண்டையிட்டுக் கொள்வதும் முறையல்ல. தாய்ப்பாலும் நதிநீரும் வேறு வேறல்ல. நதிநீரிலிருந்து அரசியலை அகற்றுங்கள். எல்லாம் தானாகச் சரியாகும்” என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x