Published : 26 Jan 2014 11:27 AM
Last Updated : 26 Jan 2014 11:27 AM

மதுரை: தனி இயக்கம் காண மு.க.அழகிரிக்கு அழைப்பு

மு.க.அழகிரியை தனி இயக்கம் தொடங்கும்படி, அவரது ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் தி.மு.க.வினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

தி.மு.க. தலைமையையும், மு.க.ஸ்டாலினையும் சீண்டும் வகையில் மதுரையில் போஸ்டர்கள் ஒட்டிய மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் 5 பேர் கடந்த வாரம் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பிறந்த நாள் விழா தகராறில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுத்த 5 பேர் நீக்கப்பட்டனர்.

இதன் பின்னரே, அதுபோன்ற போஸ்டர்களை ஒட்டுவதை அழகிரி ஆதரவாளர்கள் தவிர்த்து வந்தார்கள். இந்த நிலையில், தற்போது மு.க.அழகிரியே கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதால், தைரியமாக அவர்கள் போஸ்டர் யுத்தத்தில் குதித்துள்ளனர்.

மாட்டுத்தாவணியில் ஆரம்பித்து, மு.க.அழகிரியின் வீடு வரையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. "2016-ல் தமிழகத்தை ஆளப்போகும் எங்கள் அஞ்சா நெஞ்சரே வாழ்க பல்லாண்டு" என்று வாழ்த்துகிறது ஒரு போஸ்டர்.

"தடைகளைத் தகர்க்கும் தைரியமே", "வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் என்றும் அஞ்சாநெஞ்சன் வழியில்" என்பது போன்ற வாசகங்களில் நூற்றுக்கணக்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

இதையெல்லாம் விஞ்சும் வகையில், "அண்ணனே நீ திசை காட்டும் கருவி... நீ காட்டும் திசையில் நாங்கள்" என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் கருப்பு சிவப்பு வண்ணமோ, கட்சிக் கொடியோ, கருணாநிதியின் படமோ இடம்பெறவில்லை. அழகிரியை தனி இயக்கம் காணச்சொல்லும் வகையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அழகிரி ஆதரவாளர் ஒருவரிடம் கேட்டபோது, "அண்ணன் மதுரை வருவதற்குள் பல போஸ்டர்கள் ஒட்டுவோம். அண்ணன் வந்ததும் திண்டுக்கல் தி.மு.க.வினர் 200 பேர் அவரைச் சந்திக்க வருகிறார்கள். இதேபோல தென் மாவட்டங்களின் திமுக செயலர்களால் பாதிக்கப்பட்டவர்கள் அண்ணனைச் சந்திக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களுடன் ஆலோசனை நடத்திய பின் தன் அடுத்த திட்டம் குறித்து அண்ணன் அறிவிப்பார்" என்றார்.

இந்த வேகத்தை, பதவியில் இருக்கும்போதே அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் காட்டியிருந்தால் பிரச்சினையே வந்திருக்காதே என்கிறார்கள் ஸ்டாலின் ஆதரவாளர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x