Published : 19 May 2024 04:02 AM
Last Updated : 19 May 2024 04:02 AM

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்வது சரியல்ல: உயர் நீதிமன்றம் கருத்து

மதுரை: அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வது சரியல்ல, என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கண்காணிப் பாளராக பணிபுரிந்தவர் சரவணன். இவர் பொய்யான தகவல் அளித்து 1989-ல் கருணை பணி பெற்றதாகக் கூறி, அவர் ஓய்வுபெறும் நாளான 31.10.2022-ல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதை ரத்து செய்து தன்னை முறைப்படி ஓய்வுபெற அனு மதித்து, பணப்பலன்கள் வழங்க உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றக் கிளையில் சரவணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் என்.சதீஷ்பாபு வாதிடுகையில், மனுதாரர் பொய்யான தகவல் தெரிவித்து கருணை பணி பெற்றதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவிக்கவில்லை. மனுதாரரை பிடிக்காத 3-ம் நபர்கள் அளித்த புகாரின் பேரில் மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் பணிக் காலத்தை நிறைவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உண்மைகளை மறைத்து பணியில் சேர்ந்ததாகக் கூறி, பணியிடை நீக்கம் செய் யப்பட்டுள்ளார். அவருக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தவறானது. இது போன்ற நடவடிக்கைகள் ஓய்வுபெறும் வயது வரை அரசுக்கு சேவையாற்றிய அரசு ஊழியர்களின் மனஉறுதியை பாதிக்கச் செய்யும்.

மனுதாரருக்கு எதிரான துறைரீதியான நடவடிக்கையை அனுமதிப்பது அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அரசு ஊழியரை ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வது அந்த ஊழியருக்கு மனவேதனையை அளிக்கும். 25 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு ஊழியரின் நலனுக்கு எதிராக அரசின் அதிகாரங்களை பயன்படுத்தக் கூடாது.

எனவே, மனுதாரர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டது, குற்றச் சாட்டு குறிப்பாணை வழங்கியது சட்டவிரோதம். இரண்டும் ரத்து செய்யப் படுகின்றன. மனுதாரரை ஓய்வுபெற அனுமதித்து, அனைத்து பணப்பலன்களும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x