Published : 28 Apr 2018 12:17 PM
Last Updated : 28 Apr 2018 12:17 PM

கோவையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பான் மசாலா, குட்கா பறிமுதல்

 கோவை  சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில்  கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய, தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா ஆகியவை கைப்பற்றப்பட்டன. பான் மசாலாக்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் போலீஸார், வருவாய் துறையினர் இணைந்து ரெய்டில் இவை சிக்கின.

தமிழகத்தில் பான் மசாலாப் பொருள்கள், குட்கா தடை செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்களின் உடலுக்கு உகந்ததல்ல இதை உபயோகப்படுத்துவதால் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்புள்ளது. இதை தயாரிப்பதும் விற்பனை செய்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்நிலையில், கண்ணம்பாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் பான்பொருள்கள், குட்கா பிடிபட்டன. மேலும். இதனை தயாரிக்கும் ஆலையும் பிடிபட்டது. இது டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரிகிறது. இந்த ஆலையில் பான் மசாலா, குட்கா பொருள்கள் தயாரிப்பது வெளியே யாருக்கும் தெரியக்கூடாது என ஆலையை சுற்றிலும் மதில் சுவர்கள் 15 அடி உயரத்துக்கு எழுப்பப்பட்டுள்ளது.

51/2 ஏக்கர் நிலப்பரப்பில், 20,000 சதுரடி குடோன்களில் குட்கா ஆலை இயங்கி வருகிறது. அங்கு உள்ளூர் ஆட்கள் யாரும் வேலை செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. யாரும் உள்ளேயும் சென்றுவிட இயலாதபடி வடமாநில குண்டர்கள் பாதுகாவலர்களாக கேட்டில் நிற்க வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வெளியே வர அனுமதி கிடையாது என கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஊருக்கு போகும் போது அவர்களை வெளி ஆட்களுடன் பழக விடாமல் அங்கிருந்து வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவதுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி, சூலூர் தாசில்தார் சதாசிவம், மதுவிலக்கு போலீஸார் மற்றும் ரகசிய பிரிவு போலீஸார் உள்ளிட்டோர் ஆலையை சோதனையிட்டனர்.

இந்த ஆலையில் அதிநவீன இயந்திரத்தின் மூலம் பெருமளவில் பான் மசாலா தயாரிக்கப்பட்டுள்ளது. தினமும் விடிய காலை 3 மணிக்கு கண்டெய்னர் மூலம் பான் மசாலா, குட்கா இங்கிருந்து கடத்தப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்த சோதனை கோவையில் இதுவரையிலும் இல்லாத வகையில் ஆலையை சுற்றிலும் அதிரடிப்படை போலீஸ் குவிக்கப்பட்டு ஆலைக்கு செல்லும் பாதையெங்கு போலீஸாரால் கண்காணிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x