Published : 18 Apr 2018 08:49 AM
Last Updated : 18 Apr 2018 08:49 AM

இரவுப் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வர அதிக வாய்ப்பு: அரசு பொது மருத்துவமனை டாக்டர் தகவல்

தொடர்ந்து இரவுப் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளது என்று சென்னை அரசு பொது மருத்துவமனை புற்றுநோய் மருத்துவத் துறை தலைவர் டாக்டர்கே.கலைச்செல்வி கூறினார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்கள் - டாக்டர்கள் இடையே சுமூக உறவை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மருத்துவமனை டீன் ஆர்.ஜெயந்தி தலைமை தாங்கினார். மருத்துவக் கண்காணிப்பாளர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். புற்றுநோய் மருத்துவத் துறை தலைவர் டாக்டர் கே.கலைச்செல்வி மற்றும் துறை டாக்டர்கள் புற்றுநோய் பற்றியும், சிகிச்சைகள் குறித்தும் விளக்கினர். பொதுமக்களின் சந்தேகங்களுக்கும் பதில் அளித்தனர்.

புற்றுநோய் மருத்துவத் துறை தலைவர் டாக்டர் கே.கலைச்செல்வி கூறியதாவது:

100-க்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் உள்ளன. முடி, நகம் தவிர உடலின் அனைத்து பகுதிகளிலும் புற்று நோய் வருகிறது. புற்றுநோய்க்கு மருந்துகள், அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு ஆகிய முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை பெற்றால் முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.

ஆண்டுக்கு 10 லட்சம் பேர்

நாட்டில் ஆண்டுதோறும் புதிதாக 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். நுரையீரல், வாய், வயிற்று புற்றுநோய்களால் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மார்பகம், வாய், கர்ப்பப்பை வாய், கருப்பை புற்றுநோய்களால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இந்திய அளவில் வாய் புற்று நோய் முதலிடத்தில் உள்ளது. மார்பகப் புற்றுநோயால் மட்டும் நாடு முழுவதும் ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பெரிய நகரங்களில் மார்பகப் புற்றுநோய் பாதிப்பு அதிகம் காணப்படு கிறது. தினமும் இரவுப் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வர அதிக வாய்ப்பு உள்ளது. பெண்கள் தங்களது மார்பகங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மார்பகத்தில் சிறிய கட்டி இருந்தாலும், உடனே டாக்டரை அணுகி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

தற்போது 50 வயதுக்குள்ளாகவே புற்றுநோய்களால் பாதிக்கப்படுகின்றனர். 2020-ல் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் புற்றுநோய்களின் பாதிப்பு இன்னும் அதிக அளவில் இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் உயிரிழப்பவர்களில் 6-ல் ஒருவர் புற்றுநோயால் இறக்கிறார் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மது, புகை பழக்கம், மரபணு பிரச்சினை, வாழ்க்கை முறை, உணவு முறை மாற்றம், சிறு வயதில் திருமணம், தாமதமான குழந்தைப்பேறு, உடல்பருமன் உள்ளிட்ட காரணங்களால் புற்றுநோய் வரக்கூடும். உடல் எடை குறைதல், அடிக்கடி மூச்சு வாங்குதல், தொடர்ந்து இருமல், காய்ச்சல், சளியுடன் ரத்தம் வருதல், அஜீரணக் கோளாறு, மனஅழுத்தம், மலம் கழிப்பதில் பிரச்சினை, பெண்களுக்கு ரத்தப்போக்கு, மார்பகத்தில் கட்டி, அக்குளில் கட்டி போன்றவை புற்றுநோயின் அறிகுறிகள் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x