

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே ஊருக்குள் புகுந்து ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடித்தனர்.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தல் உள்ள வேம்பையாபுரம் பகுதிக்குள் வனத்தைவிட்டு வெளியேறிய சிறுத்தை ஒன்று புகுந்தது. கடந்த சில நாட்களாக அந்த ஊரைச் சுற்றி வந்த சிறுத்தையானது விவசாயிகளின் ஆடுகளை வேட்டையாடியது.
இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சம் அடைந்தனர். சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பாபநாசம் வனச்சரகர் சத்தியவேல் தலைமையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மோப்பநாய் உதவியுடன் சிறுத்தை எந்த வழியாக வந்து செல்கிறது என்பதை ஆய்வு செய்தனர். இதையடுத்து, சிறுத்தையை பிடிக்க வேம்பையாபுரம் மற்றும் அனவன்குடியிருப்பில் கூண்டு வைத்த வனத்துறையினர், அதற்குள் ஆட்டை அடைத்து வைத்திருந்தனர். மேலும், சிறுத்தை நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், வேம்பையாபுரத்தில் வைக்கப்பட்ட கூண்டில் இன்று அதிகாலையில் சிறுத்தை சிக்கியது. இதையடுத்து, கூண்டில் சிக்கிய சிறுத்தையை வனத்துறையினர் வனப்பகுதியில் கொண்டுவிட ஏற்பாடு செய்தனர். இதனால் இத்தனை நாளும் சிறுத்தை பயத்தில் தூக்கத்தை பறிகொடுத்த பொதுமக்கள் இப்போது நிம்மதி அடைந்துள்ளனர்.