சென்னை பாலிகிளினிக்குகளில் மனநல மருத்துவ சிகிச்சை பெறலாம்: மாநகராட்சி தகவல்

சென்னை பாலிகிளினிக்குகளில் மனநல மருத்துவ சிகிச்சை பெறலாம்: மாநகராட்சி தகவல்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வரும் பாலிகிளினிக்குகளில் இன்று 19 இடங்களில் வழங்கப்படும் மன நல மருத்துவ சிகிச்சையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், 140 நலவாழ்வு மையங்கள், 15 சமுதாய நல மருத்துவமனைகள், 3 மகப்பேறு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் சாதாரண சளி, காய்ச்சல் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கும் பொது மருத்துவம் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் நலம், குழந்தைகள் நலம் உள்ளிட்ட புறநோயாளிகளுக்கான சேவைகள் காலை 8 முதல் மாலை 3 மணி வரை வழங்கப்படுகிறது. இது தவிர சிறப்பு மருத்துவ வசதி பெற வேண்டுமெனில் அரசு பொது மருத்துவமனைகளுக்கே நோயாளிகள் செல்ல வேண்டிய நிலை இருந்தது.

மாலை நேரங்களில் மருத்துவரிடம் செல்லும் பழக்கம் சென்னை மாநகர மக்களிடம் அதிகமாக உள்ளது. அந்த நேரத்தில் மாநகராட்சி மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் கிடைக்காதது மற்றும் சிறப்பு மருத்துவ சேவைகள் இல்லாதது போன்ற குறைபாடுகள் தனியார் மருத்துவமனைகள், ஆலோசனை மையங்களுக்கு சாதகமாக இருந்தது. அங்கு மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகளுக்காக அதிக பணம் செலவிட வேண்டியுள்ளது.

இந்நிலையில், மாநகராட்சி சார்பில் தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ், சென்னையில் 40 இடங்களில் மாலை நேர பல்துறை சிறப்பு மருத்துவ சேவை வழங்கும் மையங்களை (Polyclinics) கடந்த 2018-ம் ஆண்டு மாநகராட்சி தொடங்கியது. இது ஏழை மக்களுக்கு பேருதவியாக இருந்தது.

இவற்றில் தனியார் சிறப்பு மருத்துவர்கள், ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் மூலம் பல் மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், தோல் சிகிச்சை, மகளிர் மருத்துவம், மன நல மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ சேவைகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை வழங்கப்படுகிறது.

இந்த மையங்களுக்கு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சிறப்பு மருத்துவர்கள் வருவார்கள் என்பதால் இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவ்வாறு இன்று 19 இடங்களில் மனநல மருத்துவ கிசிச்சையும், கிழக்கு கடற்கரை சாலை ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் பல் மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட உள்ளது.

அதன்படி தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனை, குப்பம், முகலிவாக்கம், கோட்டூர்புரம், திருவான்மியூர், அயனாவரம், சைதாப்பேட்டை, செனாய் நகர், எம்எம்டிஏ காலனி, எம்எம்ஏ நகர், புளியந்தோப்பு, ஜாபர்கான்பேட்டை, செம்பியம், வியாசர்பாடி சத்யமூர்த்தி நகர், மாதவரம், லட்சுமிபுரம், முகப்பேர் கிழக்கு, கொண்டித்தோப்பு, கிழக்கு கடற்கரை சாலை ஆர்எஸ்ஆர்எம் ஆகிய 19 இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று மன நல மருத்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று சென்னை மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in