அதிமுக முன்னாள் எம்எல்ஏ தா.மலரவன் காலமானார்

தா.மலரவன்
தா.மலரவன்
Updated on
1 min read

கோவை/சென்னை: கோவை மாநகராட்சி முன்னாள் மேயரும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான தா.மலரவன் (71) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

கோவை கணபதி பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த தா.மலரவன், 2001-ல் அதிமுக சார்பில் கோவை மாநகராட்சி மேயர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல, 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மேற்கு தொகுதியிலும், 2011-ல் கோவை வடக்கு தொகுதியிலும் போட்டியிட்டு எம்எல்ஏ-வானார்.

அதிமுக தொடங்கியது முதல்கட்சியில் இருந்த இவர், கோவைமாவட்ட அதிமுக செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இவருக்கு மலரவன் என்று பெயர் வைத்தது முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆவார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தீபா கட்சியில் இணைந்த மலரவன், அதிலிருந்து விலகிமீண்டும் அதிமுகவில் இணைந்தார். பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கட்சி செயல்பாடுகளில் இருந்து விலகி இருந்தார். உடல்நலக் குறைவு காரணமாக நேற்று அவர் காலமானார். தொடர்ந்து, அதிமுக மற்றும் பல்வேறு கட்சியினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தலைவர்கள் இரங்கல்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: தா.மலரவன் காலமான செய்தியறிந்து மிகுந்தவேதனை அடைந்தேன். முன்னாள்முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் அன்பை பெற்றிருந்தவரும், கட்சித் தலைமை மீது மிகுந்த விசுவாசம் கொண்டவருமான மலரவனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்பைப் பெற்ற தா.மலரவன் காலமான செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

வி.கே.சசிகலா: அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் தா.மலரவன் உடல்நலக் குறைவால் காலமான செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in