Published : 08 Apr 2018 09:05 AM
Last Updated : 08 Apr 2018 09:05 AM

ஃபேஸ்புக், ட்விட்டரில் ரஜினியை முந்திய கமல்: லைக், பின்தொடர்வோர் எண்ணிக்கையில் முன்னிலை

சமூக வலைதளங்களில் ரஜினியை பின்னுக்குத் தள்ளி கமல் முந்தியிருக்கிறார். ஃபேஸ்புக்கில் ரஜினியின் பக்கத்தைவிட பல மடங்கு அதிகமாக லைக் அள்ளியிருக்கும் கமல், ட்விட்டரிலும் ரஜினியைவிட அதிக நபர்களால் பின்தொடரப்படுகிறார்.

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜிக்கு பிறகு, முதலிடத்தை பிடிக்கும் நடிகர் யார் என்பதில் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் ரசிகர்கள் இடையே கடுமையான போட்டி நிலவியது. தனது ஸ்டைலால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ரஜினி, ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் முன்னணி நடிகராக உச்சம் தொட்டார். தனது திறமை, நடிப்பாற்றலால் ‘உலக நாயகன்’ பட்டம் பெற்ற கமல், ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தார்.

ஒரே நேரத்தில் அரசியல்...

அவர்கள் இடையிலான மறைமுகமான போட்டி, சினிமா போலவே தற்போது அரசியலிலும் தொடர்கிறது. இருவரும் ஒரே நேரத்தில் அரசியல் களத்தில் இறங்கினர்.

மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய கமல், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரடியாக சந்தித்து, அரசுகளின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார். இதனால் கடும் விமர்சனங்களுக்கும் ஆளாகிறார்.

ஆனால், ஆன்மிக அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்த ரஜினி இன்னும் தீவிர அரசியலில் இறங்கவில்லை. அதற்கான முன்னேற்பாடுகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

முன்னேறிச் செல்லும் கமல்

இந்த நிலையில், அரசியலில் ரஜினியை பின்னுக்கு தள்ளி, கமல் முன்னேறி சென்றுகொண்டு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையும் இதை உறுதி செய்வதுபோலவே அமைந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி ரஜினியின் ஃபேஸ்புக் பக்கத்தை 1.79 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். கமலின் ஃபேஸ்புக் பக்கத்தை 35.93 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். ரஜினியின் ட்விட்டர் பக்கத்தை 46.15 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இதிலும் கமல் முந்தியிருக்கிறார். அவரது ட்விட்டர் பக்கத்தை 46.95 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x