

சென்னை: சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: சாலை விபத்துக்களில் பலியாகும் 10 பேரில் 9 பேர் பாதசாரிகள் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதனால் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக தமிழக அரசுக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
சென்னையில் பல இடங்களில் பிரதான சாலைகளில் மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் தடுப்புகளை ஏற்படுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மறுபுறம் பாதசாரிகளின் பயன்பாட்டுக்காக உள்ள நடைபாதைகள் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்டு, கடைகள் மற்றும் வாகன நிறுத்து மிடங்களாக மாறியுள்ளன.
இருசக்கர வாகன ஓட்டிகளும் அதிவேகத்தில் வாகனங்களை இயக்குகின்றனர். பேருந்து நிறுத்தங்களும் மாற்றப்பட்டுள்ளதால் பல இடங்களில் நிழற்கூரைகள் இல்லை. எனவே, பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை மாநகரில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் மேற்கூரை அமைக்கவும், நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் அவர் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.டி.ஆஷா, என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மே 29-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.