Last Updated : 16 May, 2024 04:51 PM

 

Published : 16 May 2024 04:51 PM
Last Updated : 16 May 2024 04:51 PM

கோயில் சொத்தை மீட்க புதுச்சேரி ஆட்சியரிடம் சுயேட்சை எம்எல்ஏ மனு

புதுச்சேரி: அபகரிக்கப்பட்ட கோயில் சொத்தை மீட்க வேண்டும். அத்துடன் ஆக்கிரமிப்பாளருக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி சுயேட்சை எம்எல்ஏ-வான நேரு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

புதுவை வேதபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள் தேவஸ்தானத்துக்கு சொந்தமான காமாட்சியம்மன் கோயில் வீதியில் உள்ள சொத்துகள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சொத்துகளை மீட்கக் கோரியும் எம்எல்ஏ நேரு இந்து சமய அறநிலையத் துறைக்கு கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை செயலர் நெடுஞ்செழியன் இக்கோயில் சொத்து விவரங்கள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதையடுத்து, ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துக்களை உடனடியாக மீட்க முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துக்களை 15 நாட்களுக்குள் இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டுவர ஆணையருக்கு உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக விரைவான நடவடிக்கை எடுக்க வலியுறுத்து சுயேச்சை எம்எல்ஏ-வான நேரு சமூக ஆர்வலர்களுடன் சேர்ந்து ஆட்சியர் குலோத்துங்கனிடம் இன்று மனு அளித்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நேரு, “புதுவை ஸ்ரீ வேதபுரீஸ்வரர், ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முன்னாள் அறங்காவல் குழுவைச் சேர்ந்த குடும்பத்தினர் முயற்சி மேற்கொள்கின்றனர். இந்த சொத்து காமாட்சி அம்மன் கோயில் வீதியில் உள்ளளது.

சொத்தின் ஆவணங்கள் இந்து சமய அறநிலைத்துறை வாயிலாக 26.5.1988 அரசு இதழில் வெளியானது. இப்போது ஆக்கிரமிப்பில் உள்ள இந்த சொத்தை மீட்க இந்து சமய அறநிலைத்துறை சார்பு செயலாளர், தேவஸ்தான செயல் அதிகாரிக்கு உத்தரவிட்டும், 12 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் இல்லை. தேவஸ்தானத்தின் பெயரை மாற்றி பட்டா மாற்றம் செய்யும் முயற்சியும் 2017ல் தள்ளுபடி செய்யப்பட்டது.

2020-ல் சொத்தை 30 நாட்களில் மீட்டு, அபகரிக்க நினைப்பவர் மீது நடவடிக்கை எடுக்க அரசு சார்பு செயலர் குறிப்பாணை அனுப்பினார். ஆனால், அதற்கும் செயல் அலுவலர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே தேவஸ்தான அறங்காவலர்கள் துணையோடு நீதிமன்றத்தை நாடினர். இந்த சொத்தை குறுகிய காலத்தில் மீட்க இந்து அறநிலையத்துறை செயலர், ஆளுநரிடம் மனு அளித்தேன். இதையடுத்து அறநிலையத் துறை செயலர், முதல்வர் ஒப்புதலுடன் கோயில் சொத்தை மீட்டு, வருவாய் ஈட்டும் வகையில் கோயில் வசம் ஒப்படைக்க உத்தரவிட்டார் ஆளுநர்.

ஆனால் இந்து அறநிலையத்துறை ஆணையர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அபகரிப்பாளர்கள் மீதும், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுத்து கோயில் சொத்தை மீட்க வேண்டும். இதேபோல் வேதபுரீஸ்வரர் தேவஸ்தானத்தின் பல சொத்துகளும் அபகரிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே கோயில் சொத்துக்கள் அனைத்தையும் மீட்டு, பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x