

மதுரை: கொடூர குற்ற விசாரணை மையங்களில் கேமரா பொருத்தக்கோரிய வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை யாகப்பாநகரை சேர்ந்த கமலாதேவி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “என் கணவர் கார்த்திக்கை கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, மதிச்சியம் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவரை போலீஸார் கடுமையாக தாக்கினர். இதனால் என் கணவர் ஏப்ரல் 5-ம் தேதி அதிகாலை உயிரிழந்தார். எனவே, மதிச்சியம் காவல்நிலைய சிசிடிவி காட்சிகளை பாதுகாக்கவும், என் கணவரின் மரண வழக்கு விசாரணையை சிபிசிஐடி- க்கு மாற்றியும் உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி வடமலை முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹென்றி டிபேன், “கொடூர குற்றப்பிரிவு விசாரணை மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. ஆனால், மதுரையில் அந்த விதி முறையாக பின்பற்றப்படவில்லை.
மதுரை மாவட்டத்தில் கைது செய்யப்படும் நபர்களை கொடூர குற்ற விசாரணைப் பிரிவில் வைத்து அடித்து சித்திரவதை செய்து கை, கால் உடைக்கப்படுகிறது. அங்கு மனித உரிமை மீறலும் நடைபெற்று வருகிறது. எனவே கொடூர குற்றப்பிரிவு விசாரணை மையத்தில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும்” என்றார்.
இதையடுத்து நீதிபதி, விசாரணை தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.