ஜூனியர் ரெசிடென்ட் மாணவர்கள் துன்புறுத்தல்; ஜிப்மர் அதிகாரிகளுக்கு என்சிஎஸ்சி நோட்டீஸ்! 

ஜிப்மர் மருத்துவமனை | கோப்புப் படம்.
ஜிப்மர் மருத்துவமனை | கோப்புப் படம்.
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் உள்ள ஜூனியர் ரெசிடென்ட் மாணவர்களில் சிலர் தாங்கள் துன்புறுத்தப்படுவதாக எழுப்பிய புகார் தொடர்பாக புதுச்சேரி அரசு மற்றும் ஜிப்மர் அதிகாரிகளுக்கு தேசிய பட்டியல் சாதிகள் ஆணையம் (என்சிஎஸ்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜிப்மர் ஜூனியர் ரெசிடென்ட் மாணவர்கள் சிலர் தங்களது மூன்றாண்டு முதல் நிலை படிப்பின்போது சாதி ரீதியிலான பாகுபாடு, உடல் ரீதியான தீங்கு உள்ளிட்ட துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக டீனிடம் புகார் தெரிவித்திருந்தனர். எம்டி பொது மருத்துவ தேர்வில் கடந்த 2023 டிசம்பரில் வெளியிட்ட முடிவுகளில் நடைமுறை தேர்வில் வேண்டுமென்றே தோல்வி அடையும் வகையில் பாரபட்சமாக இருந்ததாகவும் அவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இந்த புகார்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளதாக ஜிப்மர் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். ஆனால், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும் தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாணவர்களின் இந்தப் புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த இருப்பதாக கடந்த வாரம் என்சிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மாணவர்கள் எழுப்பிய இந்த புகார்கள் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க புதுச்சேரி அரசு தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் ஜெனரல், முதுநிலை காவல் கண்காணிப்பாளர், ஜிப்மர் இயக்குநர் ஆகியோருக்கு என்சிஎஸ்சி தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், ‘இந்திய அரசியலமைப்பின் 338-வது பிரிவின் கீழ் என்சிஎஸ்சி-க்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு மாணவர்களின் புகார்கள் தொடர்பாக விசாரணை நடைபெறும். புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை 15 நாட்களுக்குள் ஜிப்மர் நிர்வாகம் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். தவறினால் சிவில் நீதிமன்றங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜிப்மர் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in