

சென்னை: சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 3 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த ஏ.கருணாகரன் (30) என்பவர், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் சேலம் மைன்ஸ் என்ற நிறுவனத்தில் போக்குவரத்து அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
கடந்த 11-ம் தேதி சாலைவிபத்தில் பலத்த காயமடைந்த அவர், சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு இருந்ததால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் மூளைச்சாவு அடைந்தார். அவருக்கு 11 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. மனைவி மலர்விழி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையிலும் அவரது மனைவி, பெற்றோர் அனந்த கிருஷ்ணன் மற்றும் இன்பவள்ளி, 2 சகோதரர்கள் கருணாகரனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து, கருணாகரனிடம் இருந்துசிறுநீரகங்கள், கண்கள், கல்லீரல், இதய வால்வுகள் தானமாக பெறப்பட்டன.
ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 53வயது ஆணுக்கு கல்லீரலும்,36 வயது ஆணுக்கு ஒருசிறுநீரகமும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பொருத்தப்பட்டன.
கண்கள் தேவையானவர்களுக்கு பொருத்துவதற்காக, மருத்துவமனையின் கண் வங்கியில் வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு சிறுநீரகம்,இதய வால்வுகள் தேவையான மற்ற மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன.