Published : 09 Apr 2018 10:12 PM
Last Updated : 09 Apr 2018 10:12 PM

ஐபிஎல்: சேப்பாக்கம், திருவல்லிக்கேணி மக்கள் செய்ய வேண்டியது என்ன?

நாளை ஐபிஎல் கிரிக்கெட் நடப்பதை ஒட்டி சேப்பாக்கத்திற்கு வரும் ரசிகர்கள், பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும், சிக்கலில்லாமல் பயணம் செய்வது குறித்த பதிவு.

ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது என்ற எதிர்ப்பையும் மீறி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு காவல்துறை கடும் பாதுகாப்பு ஏற்பாட்டை செய்துள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதுகாப்பு பணிக்கு 13 துணை ஆணையாளர்கள் தலைமையில் 2000 காவல் போலீஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இரவு சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் இடத்தைச் சுற்றி பாதுகாப்புக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தலைமையில், தெற்கு கூடுதல் ஆணையாளர் எம்.சி. சாரங்கன் மேற்பார்வையில் , இணை ஆணையாளர்கள், 13 காவல் துணை ஆணையாளர்கள், 7 கூடுதல் துணை ஆணையாளர்கள், 29 உதவி ஆணையாளர்கள், 100 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 2,000 காவல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மேலும், கமாண்டோ படையின் ஒரு அணியும், சென்னை காவல் ஆயுதப்படையைச் சேர்ந்த அதி தீவிர படையின் நான்கு குழுக்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, மைதானத்தின் உள்ளேயும், மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும் காவல்துறையால்  பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தவிர போக்குவரத்து நெரிசலின்றி வாகனங்கள் சீராகச் செல்லவும், போட்டியைக் காண வரும் ரசிகர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கும் போக்குவரத்து கூடுதல் ஆணையாளர் அருண், தலைமையில், போக்குவரத்து காவல் போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மேலும் போட்டியைக் காண வரும் ரசிகர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

போட்டி நடக்கும் சேப்பாக்கம் ஸ்டேடியத்தைச் சுற்றிலும் உள்ள அனைத்து சாலைகள், தெருக்களை அடைத்து போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். அனைத்து சாலைகளிலும் வாகனம் அனுமதி மறுக்கப்படுகிறது. பலத்த சோதனைகளுக்கு பிறகு டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

சோதனையின் போது கருப்பு  சட்டை, டி.ஷர்ட், உள்ளுக்குள் கருப்பு உள்பனியன் எது போட்டிருந்தாலும் அனுமதி மறுக்கப்பட்டும். கைப்பை, தோளில் மாட்டும் பை, குடை, கொடி, பதாகை, தண்ணீர் பாட்டில் எதுவும் அனுமதி இல்லை.

அண்ணா சாலையிலிருந்து வாலாஜா சாலை வழியாக போக்குவரத்து தடை செய்யப்படும். திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டாலும் பைகிராப்ட்ஸ் சாலையில் அனுமதி இல்லை. இதே போல் கடற்கரையிலிருந்து பைகிராப்ட்ஸ் சாலைக்கும், உழைப்பாளர் சிலை வழியாகவும் உள்ளே திரும்ப முடியாது.

இதன் காரணமாக நாளை மைதானத்தைச் சுற்றியுள்ள அனைத்து சாலைகளும் கடும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும். இதன் தொடர்ச்சி ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, எழும்பூர் பகுதிகளிலும் எதிரொலிக்கும்.

ஆகவே பொதுமக்கள் அப்பகுதியில் வசிப்போர் அதற்கு ஏற்றார்போல் தங்கள் பணிகளை அமைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்க நேரிடும். இதே போல் இரவிலிருந்தே போலீஸார், அதிரடிப்படை போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். அனைத்து வாகனங்களும் இரவு முதல் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x