

திருச்சி மலைக்கோட்டையின் உச்சியில் அமைந்துள்ள உச்சிப் பிள்ளையார் கோயிலில் விநாயக சதுர்த்தி விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 75 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கொழுக்கட்டை அங்கு படையலிடப்பட்டது.
திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகர் கோயிலில் வெள்ளிக்கிழமை தொடங்கிய விநாயக சதுர்த்தி விழா செப்டம்பர் 11-ம் தேதி வரை தொடர்ந்து 14 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான வெள்ளிக்கிழமை மாணிக்க விநாயகருக்கும், உச்சிப் பிள்ளையாருக்கும் தலா 75 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கொழுக்கட்டை படையலிட்டு நைவேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் அந்த கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இந்த பிரம்மாண்ட கொழுக் கட்டைகளைத் தயாரிக்கும் பணி புதன்கிழமை பிற்பகலில் தொடங்கியது. கோயில் மடப்பள்ளி பணியாளர்கள் கொழுக்கட்டை தயாரிக்கும் பணியில் ஈடுட்டனர். பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை (150 கிலோ) ஒன்றாகக் கலந்தனர். பிறகு அந்த கலவை மாவை இரு பங்காகப் பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து புதன்கிழமை காலை வரை தொடர்ந்து 18 மணி நேரம் நீராவியால் வேகவைத்தனர்.
வெள்ளிக்கிழமை காலை 9.35 மணிக்கு இந்த பிரம்மாண்ட கொழுக்கட்டைகளில் ஒன்றை தொட்டில் போன்ற தூளியில் வைத்து தூக்கிச் சென்று உச்சிப் பிள்ளையாருக்கு படையலிட்டனர். காலை 10 மணிக்கு மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு மற்றொரு பிரம்மாண்ட கொழுக்கட்டை படையலிடப்பட்டது.
விநாயக சதுர்த்தி விழாவை யொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே மலைக்கோட்டைக்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். தொடர்ந்து விநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் தீபாரா தனைகள் நடைபெற்றன.
விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை முதல் வரும் செப்.11-ம் தேதி வரை பால கணபதி, நாகாபரண கணபதி, லட்சுமி கணபதி, தர்பார் கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜ அலங்காரம், மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷபாருடர், சித்தி புத்தி கணபதி, நடன கணபதி ஆகிய அலங்காரங்களில் மாணிக்க விநாயகர் சன்னதியில் விநாயகர் காட்சி அளிக்கிறார். விழா ஏற்பாடுகளை அறநிலையத் துறை அலுவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.