Published : 15 May 2024 02:22 PM
Last Updated : 15 May 2024 02:22 PM

கல்லணை, அணைக்கரையில் பொறியாளர் சர்.ஆர்தர் காட்டனின் 221-வது பிறந்த நாள் விழா!

தஞ்சை: இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என்றழைக்கப்படும் பொறியாளர் சர்.ஆர்தர் காட்டனின் 221-வது பிறந்தாள் விழா இன்று அணைக்கரை மற்றும் கல்லணையில் கொண்டாடப்பட்டது.

திருவிடைமருதூர் வட்டம், அணைக்கரை கொள்ளிடத்தின் குறுக்கே கீழணையும், முக்கொம்புவில் காவிரியின் குறுக்கே மேலணையும், கல்லணையில் மணல் போக்கிகள் மற்றும் வெண்ணாறு போன்ற நீர் ஒழுங்குகள் அமைத்து, பாசன கட்டுமானங்களைக் கட்டி, பாசன நீரை முறைப்படுத்தி, காவிரி டெல்டாவில் உள்ள பாசனப் பகுதிகளுக்கு நீர் வழங்குவதற்குத் தனது வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்த இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என்றழைக்கப்படும் பொறியாளர் சர்.ஆர்தர் காட்டனின் 221வது பிறந்தாள் விழா இன்று அணைக்கரை மற்றும் கல்லணையில் கொண்டாடப்பட்டது.

திருவிடைமருதூர் வட்டம் அணைக்கரை, கீழணை,பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அருகில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர் சாமு.தர்மராஜன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆர்.செந்தில்குமார், டி.ஆர்.குமரப்பா, ஏ.ராஜேந்திரன், ஏ.எம். ராமலிங்கம், தங்க.சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, மூத்த வழக்கறிஞர் மு.அ.பாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இறுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ஜி.கல்யாண சுந்தரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி கூறினார்.

இதேபோல் கல்லணையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத் தலைவர் பி.சின்னதுரை தலைமை வகித்தார். செயலாளர் சுவாமிமலை சுந்தர. விமலநாதன் சிறப்புரையாற்றினார். துணைச் செயலாளர் திருப்பூந்துருத்தி பி.சுகுமாரன், பொருளாளர் எஸ்.ராமநாதன், துணைத் தலைவர் ஜி.பிரகாசன் மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். இந்த விழாவின் பங்கேற்ற விவசாயிகள், தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கைகள்:

‘காவிரி, கொள்ளிடம் ஆறுகள், கல்லணை. முக்கொம்பு, அணைக்கரைகளில் உள்ள கதவணைகளுக்குப் பேரபாயத்தை ஏற்படுத்தும் மணல் குவாரிகளை எக்காலத்திலும். அனுமதிக்கக் கூடாது. மணல் குவாரிகளை தடை செய்து, மணல் கொள்ளையைத் தடுத்த வேண்டும்.

சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களுக்கு ஒரே குடிநீர் ஆதாரமாக இருந்து சுமார் 5 கோடி மக்களுக்குக் குடிநீர் தந்து கொண்டிருக்கும் 'கொள்ளிடத்தின் நிலத்தடி நீர் மட்டம் செறிவூட்டப் பட வேண்டிய காலக் கட்டாயத்தில் இருப்பதால், முக்காம்பிற்கும் கொள்ளிட நீர் கடலில் கலக்கும் இடத்திற்கும் இடையே 7 இடங்களில் புதியதாக கதவணை அமைக்க வேண்டும்.

கொள்ளிடம் ஆற்றில் தூத்தூர் - வாழ்க்கை கதவணை திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். ஆறுகளில் கரைகளில் அனுமதி இன்றி செயல்படும் செங்கல் சூளையை தடை செய்ய வேண்டும், கொள்ளிடம், காவிரி அதன் கிளை ஆறுகளைப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலங்களாக அறிவிக்க வேண்டும்.

அணைக்கரை கீழணையில் சர்.ஆர்தர் காட்டனுக்கு சிலையும், அவரது பெயரில் நினைவு பூங்கா அமைக்க வேண்டும். அவர் ஆற்றியுள்ள பணிகளைப் போற்றும் வகையில் அவரின் பிறந்த தினமான மே 15-ம் தேதியை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.

கல்லணையில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்குத் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்த வேண்டும். அவரது பெரும்பணிகளை இளைய தலை முறையினர் அறிந்து கொள்ளும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும், அணைக்கரை கீழணையில் சர்.ஆர்தர் காட்டன் சிலையும், அவரது பெயரில் நினைவு பூங்கா அமைக்க வேண்டும்’ என விழாவின் பங்கேற்ற விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x