கனியாமூர் பள்ளி மாணவி மர்ம மரண வழக்கு மே 28-க்கு தள்ளிவைப்பு: கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் மன்றம் உத்தரவு

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்திருந்த மாணவியின் தாய் மற்றும் அவரது வழக்கறிஞர்கள்.
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்திருந்த மாணவியின் தாய் மற்றும் அவரது வழக்கறிஞர்கள்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: கனியாமூர் தனியார் பள்ளி மாணவிமர்ம மரண வழக்கு விசாரணை வரும் 28-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியின் பிளஸ்-2 மாணவி 2022 ஜூலை 13-ல் மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளியின் 3-வது மாடியில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, ஜூலை 17-ல் பள்ளியில் பெரிய அளவில் கலவரம் வெடித்து, உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டன.

பள்ளி நிர்வாகிகள் கைது: மாணவி மரணம் தொடர்பான வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. சிபிசிஐடி போலீஸார் 1,152 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தநிலையில், பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, வழக்கு விசாரணை கள்ளக்குறிச்சி தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த ஏப்ரல்30-ல் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பு கேமரா பதிவு, மாணவியின் செல்போன் உரையாடல், முதல் தகவல் அறிக்கை உள்ளிட்டவிவரங்களை வழங்குமாறு மாணவி தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டனர். மேலும், ஆசிரியர்களை மீண்டும் வழக்கில் சேர்க்கவலியுறுத்தி வக்காலத்து தாக்கல் செய்யப்பட்டது.

கதறி அழுத தாய்: இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பள்ளித் தாளாளர் ரவிக்குமார், செயலர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆஜராயினர். நீதிமன்ற வளாகத்தில் நின்றிருந்த மாணவியின் தாய் செல்வி, பள்ளி நிர்வாகிகளைக் கண்டதும் கூச்சலிட்டவாறு அழுதார். அருகில் இருந்தவர்கள் அவரை அமைதிப்படுத்தினர்.

மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ப.பா.மோகன் கடந்த விசாரணையின்போது கோரிய, அரசு மருத்துவமனை கண்காணிப்பு கேமரா பதிவு, மாணவியின் செல்போன் உரையாடல், முதல் தகவல்அறிக்கை உள்ளிட்ட விவரங்களை வழங்க வேண்டும் என்றார்.

அரசு வழக்கறிஞர் தேவசந்திரன் கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு தள்ளிவைத்து தலைமைக் குற்றவியல் நடுவர் ராம் உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in