

மேட்டூர்: காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 138 கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்யத் தொடங்கியுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சற்று உயர்ந்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 57 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 138 கன அடியாக அதிகரித்தது. காவிரி கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக, அணையில் இருந்து விநாடிக்கு 1,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர் வரத்தை விட நீர் திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர் மட்டம் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 50.78 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் நேற்று 50.57 அடியாகவும், நீர் இருப்பு 18.30 டிஎம்சியில் இருந்து 18.17 டிஎம்சியாகவும் குறைந்துள்ளது.