மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம். ( அடுத்தப்படம் ) ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்.
ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம். ( அடுத்தப்படம் ) ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்.
Updated on
1 min read

ராஜபாளையம்: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆறு மற்றும் செண்பகத்தோப்பு பேயனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு, தேவதானம் சாஸ்தா கோயில் அருவி, ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பேயனாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் மற்றும் நீரோடைகள் உருவாகின்றன. இவற்றில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருப்பதால் விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. கோடை வெயில் காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அருவிகள், காட்டாறுகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

வழக்கமாக விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அலைமோதும் தேவதானம் சாஸ்தா கோயில் ஆறு, அய்யனார் கோயில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் அருவி, செண்பகத் தோப்பு மீன்வெட்டி பாறை அருவி ஆகியவை வெறிச்சோடி காணப் பட்டன. இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 2 மணி நேரத்துக்கு மேல் கனமழை பெய்தது. இதனால் மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோயில் ஆறு, செண்பகத்தோப்பு பேயனாறு மற்றும் நீர் வீழ்ச்சிகளில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

இதன் மூலம் தேவதானம் சாஸ்தா கோயில் அணை, ராஜபாளையம் நகரின் பிரதான குடிநீர் ஆதாரமான 6-வது மைல் நீர்த்தேக்கம் ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் மலையடிவாரத்தில் உள்ள கண்மாய்களுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் விவசாயிகள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in