Published : 30 Apr 2018 07:25 PM
Last Updated : 30 Apr 2018 07:25 PM

‘காதலிக்க மறுத்தால் கழுத்தை அறுப்பாயா?’- இளைஞரை கல்லால் தாக்கி மாணவியை மீட்ட ‘பலே பொதுமக்கள்’

 அண்ணாமலை பல்கலை. மாணவியை ஒருதலைக் காதலால் கழுத்தறுத்து கொல்ல முயன்ற இளைஞர் ஒருவரைச் சுற்றியிருந்த பொதுமக்கள் கல்லாலேயே தாக்கி நையப்புடைத்து போலீஸில் ஒப்படைத்தனர். ‘காதலிக்க மறுத்தால் கழுத்தை அறுப்பாயா?’ என்று கேட்டே உதைத்தனர்.

சமீபகாலமாக பெண்கள், குறிப்பாக கல்லூரி மாணவிகள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் வாடிக்கையான நிகழ்வாக மாறிப்போனது. சுவாதியில் தொடங்கி தங்களது காதலை மறுத்த நந்தினி, வினோதினி, வித்யா, சோனியா , கரூர் சோனாலி, விழுப்புரம் வீணா, மதுரை திருமங்கலத்தில் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மாணவி சித்ராதேவி, மதுரவாயல் அஸ்வினி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

கடந்த ஆண்டு வேளச்சேரியில் தன்னைக் காதலிக்க மறுத்த இந்துஜா என்ற இளம்பெண்ணை ஆகாஷ் என்பவர் பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இதில் அவர் உயிரிழந்தார், அவரைக் காப்பாற்ற முயன்ற தாயார் ரேணுகா மற்றும் தங்கை நிவேதிதாவும் பின்னர் உயிரிழந்தனர்.

சில மாதங்களுக்கு முன் மடிப்பாக்கத்தில் ரத்தப் பரிசோதனை மையத்தில் பணியாற்றிய 32 வயது இளம்பெண் யமுனா அம்மையத்தின் முதலாளியின் பாலியல் சீண்டலுக்கு உடன்படாததால் எரித்துக் கொல்லப்பட்டார்.

பெண்கள் குறித்த பாலியல் ரீதியான பார்வையின் வெளிப்பாடே இத்தகைய சம்பவங்கள். நான் நினைத்துவிட்டால் முடிப்பேன் என்ற எண்ணம் சாதாரணமாக ஒவ்வொரு ஆண் மகனின் உள்ளுக்குள்ளும் உறங்கிக் கிடக்கிறது.

இதன் அளவு சமுதாயத்தில் நாம் வளர்க்கப்படும் விதம், சுற்றுச்சூழல் காரணமாக கூடும், குறையும். ஆணாதிக்க சிந்தனை என்பதன் வெளிப்பாடு சாதாரண நிகழ்வுகளில் கூட வெளிப்படும். அதன் அளவு மாறுபடும்போது தான் பெண்களுக்கு எதிரான வன்முறையாக மாறுகிறது.

காதல் என்பதும் அப்படித்தான் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு பெண் தன்னை காதலிக்கும் வரை தனது நெகடிவ் பக்கங்களை காண்பித்துக்கொள்ளாத ஆண், காதலிக்க ஆரம்பித்த பின்னர் தனது செயல்கள் மூலம் அதை காண்பிக்கும் போது அந்தப் பெண் அவனைத் திருத்தப் போராடுகிறாள்.

ஆனால் நான் ஆண்,  நீ பொறுத்துப் போக வேண்டும், ஊரில் யாரும் செய்யாததையா நான் செய்கிறேன் என்ற மனோபாவம் அதிகரிக்கும்போது அங்கு பாதிக்கப்படும் பெண் காதலனை மறுக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஆண்களுக்கு ஆண்கள் வேறுபடுகிறது.

விளைவு சிலர் உச்சகட்டமாக காதலித்த பெண்ணையே கொல்லும் மன நிலைக்கு செல்கின்றனர். இவ்வாறு நடக்கும் சம்பவங்களில் தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற மனோபாவமும், ஒரு பெண் விரும்பவும், மறுக்கவும் அவளுக்கு உரிமை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாததன் விளைவே வன்முறையாக மாறுகிறது.

ஆசிட்வீச்சு, கத்திக்குத்து, அரிவாள் வெட்டு, கழுத்தறுப்பு போன்றவை நடக்கின்றன. பொதுவாக இப்படி நடக்கும் சம்பவங்களில் பொதுமக்கள் வேடிக்கை பார்க்கும் மன நிலையில் இருந்ததைத்தான் காண முடிந்தது. சுவாதியை வெட்டிய நபர் சாவகாசமாக அரிவாளை பையில் வைத்துச் சென்றார். யாருக்கும் மடக்கிப் பிடிக்கும் துணிவில்லை.

மதுரையில் சில ஆண்டுக்கு முன் பட்டப்பகலில் கத்தியால் குத்தி காதலியைக் கொன்றார் இளைஞர் ஒருவர், ஆனால் யாரும் அந்த இளைஞரைத் தடுக்க முனையவில்லை. சுற்றி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்தனர். மதுரவாயல் அஸ்வினி கொலையிலும் அதேதான் நடந்தது.

இப்படிப்பட்ட வன்முறைகளைத் தட்டிக் கேட்காத மனநிலைக்கு பொதுமக்கள் வந்துள்ள காலகட்டத்தில் இன்று சிதம்பரம் அண்ணாமலை நகரில் நவின் குமார் என்ற இளைஞர் கல்லூரி மாணவியை, அவர் காதலிக்க மறுத்த காரணத்தால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சிக்க வழக்கம் போல் பொதுமக்கள் வேடிக்கை பார்க்காமல் கையில் கிடைத்த கற்கள், கட்டை, செருப்பு என பலவற்றையும் எடுத்து அந்த இளைஞரைத் தாக்கினர்.

இதைப்பார்த்த மற்ற பொதுமக்களும் அந்த இளைஞரைத் தாக்க கழுத்தை அறுக்கும் முயற்சியைக் கைவிட்டு அந்த இளைஞர் ஓட ஆரம்பித்தார். கொலை முயற்சியில் இருந்து தப்பித்த மாணவி காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதில் பொதுமக்கள் உடனடியாக செயல்பட்டு இளைஞரைக் கல்லால் தாக்காவிட்டால் அந்த மாணவி கொல்லப்பட்டிருக்கலாம். ‘காதலிக்க மறுத்தால் கழுத்தறுப்பாயா’ என்று கேட்டு கல்லால் தாக்கி மாணவியின் உயிரைக் காத்த பொதுமக்கள் அதன் பின்னர் இளைஞரைக் காவலரிடம் ஒப்படைத்தனர்.

பொதுவெளியில் செயின் பறித்தவனை, துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளையடித்தவனை பொதுமக்கள் விரட்டிப் பிடிக்கின்றனர். இதன் அடுத்தக்கட்ட முன்னேற்றமாக ஒரு மாணவியின் உயிர் பொதுமக்களால் காக்கப்பட்ட சம்பவம் போற்றத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x