

சென்னை: சென்னையில் சுகாதார துறை முன்னாள் இணை இயக்குநர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை முகப்பேரில் உள்ள சுகாதார துறை முன்னாள் இணை இயக்குநர் மருத்துவர் பழனியின் வீட்டில் அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகமுன்னாள் இணை இயக்குநர் பழனி மீது நேற்று வழக்குப் பதியப்பட்ட நிலையில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது பழனி, சென்னை எழும்பூர் குடும்ப நல பயிற்சி மையத்தின் முதல்வர் பொறுப்பை வகித்து வருகிறார். இவர் காஞ்சிபுரத்தில் சுகாதார துறை முன்னாள் இணை இயக்குநராக பணிபுரிந்த சமயத்தில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. இந்தப் புகாரின் அடிப்படையில் நேற்று அவர் மீது காஞ்சிபுரத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்குப் பதிவு செய்யப்பட்ட மறுநாளான இன்று, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பழனியின் வீட்டில் தீவிர சோதனையிட்டு வருகின்றனர்.