

மத்திய, மாநில அரசுகள் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தேசிய மக்கள் கூட்டமைப்பு தலைவர் சசிபெருமாள் டெல்லியில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இது குறித்து ‘தி இந்து’ செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:
இந்திய அரசியல் சாசன சட்டப் பிரிவுகளின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்படவில்லை. இச்சட்டங்களின்படி செயல்பட்டிருந்தால் நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும்.
இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசின் மதுபான விற்பனையால் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் தமிழக மக்களைக் காப்பாற்ற வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் தனி மனிதனாக கடந்த ஜூலை 30-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறேன். பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்திக்க மனு கொடுத்திருக்கிறேன்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் டெல்லியில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகள் நேரில் வந்து என்னுடன் அமர்ந்து எனது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.