

கோவை: சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில்எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்து கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கரை, தேனியில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார்கடந்த 4-ம் தேதி கைது செய்தனர்.அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டு கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டார்.
பின்னர் அடுத்தடுத்து வந்த புகாரின்பேரில் தேனி, திருச்சி, சென்னை போலீஸார் கைது செய்தனர். மேலும், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு போலீஸில் பதிந்த வழக்கு தொடர்பாக, குண்டர் சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கையில் மாவுக் கட்டு: இதற்கிடையே, கை எலும்பு முறிவு தொடர்பாக மாவுக்கட்டு போடப்பட்டிருந்த சங்கர், மருத்துவ சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு நேற்று காலை அழைத்து வரப்பட்டார். அப்போது அவர், ‘கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர்தான் எனது கையைஉடைத்தார். சிறையில் என் உயிருக்கு ஆபத்து, நான் கொல்லப் படுவேன்’ என்று ஆவேசமாகக் குரல் எழுப்பியபடி சென்றார்.
அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னர் குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றம் எண் 4-ல் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீஸார் தரப்பில் 5 நாட்கள் காவலில்எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக்கோரிய மனு, நீதிபதி சரவணபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், ஒரு நாள் மட்டும் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார்.
மேலும், “ஒவ்வொரு 3 மணிநேரத்துக்கும் ஒருமுறை 15 நிமிடங்கள் வழக்கறிஞரைச் சந்திக்க சங்கருக்கு அனுமதி அளிக்க வேண்டும். இன்று (மே 14) மாலை 5 மணிக்கு நீதிமன்றத்தில் அவரை மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும்” எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார் சவுக்கு சங்கரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து, சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘சைபர் கிரைம் போலீஸாரின் காவல் கோரும் விசாரணை மனுவுக்கு ஒத்துழைப்பு தந்தோம். காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது மனநலம் பாதிக்கப்பட்ட அறையில் இருந்துமாற்ற வேண்டும் என்று தெரிவிப்போம். அதேபோல் குண்டர் சட்டத் துக்கும் எதிர்ப்பு தெரிவிப்போம். அதற்கு காலஅவகாசம் உள்ளது’’ என்றார்.