

கூடலூர்: வனத்துறை வெளியிட்ட யானைகள் வழித்தடம் குறித்த புதிய வரைவுப் பட்டியலை எதிர்த்து கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் யானைகள் வழித்தடம் தொடர்பான புதிய அறிவிப்பால் கூடலூர், ஓவேலி, முதுமலை ஆகிய வனச்சரக அலுவலகங்களுக்கு உட்பட்ட 31 கிராமங்களில் 2,547 வீடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 7 வருவாய் கிராமங்களில் 34,796 வீடுகள் யானை வழித்தடத்தில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, நெலாக்கோட்டை, சேரங்கோடு, நெல்லியாளம் நகராட்சி, மசினகுடி ஆகிய உள்ளாட்சிப் பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், வனத்துறை ஏப்.29-ம் தேதியிட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மக்களின் கருத்தைக் கேட்ட பிறகுதான் உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வனத்துறையின் புதிய உத்தரவை எதிர்த்து, கூடலூர் சட்டப்பேரவைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் நேற்று கருப்புக் கொடி ஏற்றப்பட்டது.
ஸ்ரீமதுரை ஊராட்சி, ஏச்சன் வயல் கிராமத்தில் ஊராட்சி தலைவர் கே.ஆர்.சுனில் தனது வீட்டில் கருப்புக் கொடி கட்டினார். இது குறித்து அவர் கூறும்போது, “வனத்துறை வெளியிட்ட யானைகள் வழித்தட வரைவுப் பட்டியல் குறித்து மக்களுடைய ஆலோசனையைப் பெற கால அவகாசம் வழங்க வேண்டும். கிராம சபையில் அங்கீகாரம் பெற வேண்டும். கூடலூர், பந்தலூர் பகுதி மக்களைப் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.