

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே பெய்த கனமழையில் தற்காலிக பாலம் இடிந்து, மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் 3 கிராம மக்கள் அவதியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. அதேபோல் தேன்கனிக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 42 மிமீ மழை பெய்தது. இந்நிலையில் குந்துக்கோட்டையிலிருந்து அந்தேவனப்பள்ளி செல்லும் சாலையில் உள்ள ஆற்றின் இடையே புதிய பாலம் அமைக்க உள்ளதால், அதன் அருகே வெங்கடாபுரம், ராமச்சந்திரம், அனுமந்தபுரம் ஆகிய 3 கிராம மக்கள் சென்று வருவதற்கு வசதியாக தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது.
இந்த பாலம் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், அப்பகுதி வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கிராம மக்கள் அவதியடைந்தனர். மேலும் தங்களது அன்றாட தேவைக்கு 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்காலிக பாலத்தை சீரமைக்க வருவாய்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதேபோல் அப்பகுதியில் வீசிய சூறைக் காற்றுக்கு, 4 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே போல் குந்துக்கோட்டை- அந்தேவனப்பள்ளி இடையே புதிய பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என 3 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.