Published : 14 May 2024 05:35 AM
Last Updated : 14 May 2024 05:35 AM

மாநகராட்சி வீடற்றோர் காப்பகங்களில் தங்கி படித்து 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 11 மாணவர்கள்: ராதாகிருஷ்ணன் கவுரவித்தார்

சென்னை: சென்னை மாநகராட்சியின் வீடற்றோர் காப்பகங்களில் தங்கிபடித்து 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 11 மாணவர்களை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கவுரவித்தார். சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் 50 வீடற்றோர் காப்பகங்கள் இயங்கி வருகின்றன.

இவற்றில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் வசிப்போர் தங்கியுள்ளனர். இங்கு தங்கியுள்ளவர்களில் ஏராளமான மாணவர்கள் மாநகராட்சி பள்ளிகளுக்கும் சென்று படித்து வருகின்றனர்.

இவர்களுக்கு அம்மா உணவகங்கள் மூலமாக உணவும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு காப்பகமும் தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கு தங்கியிருப்போருக்கு சுயதொழில் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த காப்பகங்களில் 10,283 பேர் வசித்து வருகின்றனர்.

10-ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில், இந்த வீடற்றோர் இரவு நேர காப்பகங்களில் தங்கி படித்து 11 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தண்டையார்பேட்டையில் உள்ள காப்பகத்தில் தங்கி படித்த மாணவி வி.பவித்ரா 500-க்கு327 மதிப்பெண்களும், திருவான்மியூரில் உள்ள காப்பகத்தில் தங்கி படித்த மாணவர் என்.ஆதவன் 362 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.

இவர்களை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டு, அனைவரையும் கவுரவப்படுத்தினார். அவர்களுக்கு பரிசுகள்வழங்கி, சிறிது நேரம் கலந்துரையாடினார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘‘இந்த மாணவர்கள் அனைவரையும் 11-ம் வகுப்பில் விரும்பிய பாடப்பிரிவில் சேர்ந்து மேல்நிலை கல்வி பயில ஊக்கப்படுத்தி வருகிறோம். மேலும் அவர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x