

மதுரை: அதிமுகவில் எந்தவித பிளவோ, இடைவெளியோ இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, நேற்று முன்தினம் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அதையொட்டி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிர்வாகிகளுடன் சேலத்தில் அவரைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் குமாரம் கிராமத்தில் நேற்று அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத் தொடங்கி வைத்த ஆர்.பி.உதயகுமார், செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் நிர்வாகிகள் மத்தியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக சிலர் வாய்க்கு வந்ததை உளறிக் கொண்டிருக்கிறார்கள். பழனிசாமி யாரிடமும் பதவி கேட்கவில்லை. தொண்டர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவர் பொதுக் குழு மூலம் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் அதிமுகவை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஆனால், அதிமுக தொண்டர்களிடம் குழப் பத்தை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.
அதிமுகவில் எந்த பிளவும், இடைவெளியும் இல்லை. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தின் மூலம் அதிமுகவை பழனிசாமி மீட்டெடுத்துள்ளார். மக்களவைத் தேர்தலில் அதிமுக அணி நிச்சயம் 40 இடங்களிலும் வெல்லும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் இ.மகேந்திரன், கே.மாணிக்கம், கருப்பையா, மாநில நிர்வாகிகள் ராஜேஷ் கண்ணா, வெற்றிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.