

சென்னை: மத்திய அரசு நிறுவனத்திடம் இருந்து 500 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் வாங்க மின்வாரியத்துக்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் பங்கை அதிகரிக்குமாறு மாநில மின்வாரியங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கேற்ப, தமிழக மின்வாரியம் சூரியசக்தி மின்சாரத்தை அதிக அளவில் கொள்முதல் செய்கிறது.
மத்திய அரசின் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்ற நிறுவனத்திடம் இருந்து 500 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் கொள்முதல் செய்ய, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் அனுமதி கேட்டது.
மின்வாரியத்தின் கோரிக்கையை பரிசீலித்த ஆணையம், 25 ஆண்டுகளுக்கு ஒரு யூனிட் ரூ.2.72 என்ற விலையில் 200 மெகாவாட், ஒரு யூனிட் ரூ.2.73 என்ற விலையில் 300 மெகாவாட் வாங்க அனுமதி அளித்துள்ளது.