

சேலம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது 70-வது பிறந்த நாளை சேலத்தில் கேக் வெட்டி கொண்டாடினார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் பழனிசாமியை, முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுகவினர் ஏராளமானோர் நேரில் சந்தித்து, பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
70 கிலோ கேக்... சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமையில் அதிமுகவினர் ஏராளமானோர் திரண்டு வந்து, ஆளுயர முந்திரி மாலையை பழனிசாமிக்கு அணிவித்தனர். மேலும், அதிமுகவினரால் கொண்டு வரப்பட்ட 70 கிலோ கேக்கை வெட்டி, தொண்டர்களுக்கு பழனிசாமி வழங்கினார்.
முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார், கே.பி.அன்பழகன் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சேலத்துக்கு வந்து, பழனிசாமிக்கு பிறந்த நாள்வாழ்த்து தெரிவித்தனர். மேலும், அதிமுக தொண்டர்கள் சால்வை அணிவித்தும், ஆட்டுக்குட்டி உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும்,மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கட்சியினர் திரண்டு வந்ததால், அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் அதிமுகவினர் குவிந்திருந்தனர்.