Published : 10 Apr 2018 09:32 PM
Last Updated : 10 Apr 2018 09:32 PM

ஐபிஎல் போட்டியில் மைதானத்தில் காலணி வீச்சு: நாம் தமிழர் கட்சியினர் கைது

ஐபிஎல் போட்டிக்கு சாலையில் போராட்டம் நடந்த நிலையில் போட்டி நடக்கும்போது மைதானத்துக்குள் காலணி வீசிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஐபிஎல் போட்டிக்கு எதிராக வலுவான போராட்டம் நடந்துவரும் நிலையிலும் போட்டி தொடங்கியயது. இன்று மதியம் முதல் போலீஸார் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தும் போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டங்களால் சேப்பாக்கம் பரபரப்பானது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், நாம் தமிழர், மே 17, எஸ்டிபிஐ, விடுதலை சிறுத்தைகள், பாரதிராஜா, சீமான், தமீமுன் அன்சாரி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கடும் போராட்டம் நடத்தி கைதாகினர். இன்று நடந்த போராட்டத்தில் 1000 பேர் வரை கைது செய்யப்பட்டனர்.

ஆனாலும் மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிறைந்தது. போட்டியும் திட்டமிட்டபடி நடந்தது. போட்டியின் இடையே அசம்பாவிதம் எதுவும் நடக்கலாம் என எதிர்பார்த்து மைதானத்துக்குள்ளே போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் பவர் பிளே முடிந்த பின்னர் பவுண்டரி லைன் அருகே பட்டாபிராம் முனை பகுதியில் காலரியிலிருந்து ஷூ ஒன்று மைதானத்திற்குள் வீசப்பட்டது. அது நேராகச் சென்று ஜடேஜா அருகில் விழுந்தது. அவர் அதைப் பார்த்து திடுக்கிட்டார். பின்னர் அதைக் காலால் உதைக்க முயன்றார். அது மீண்டும் மைதானத்திலேயே விழுந்தது.

மைதானக் காவலர்கள் காலணியை எடுத்துச் சென்றனர். உடனடியாக மைதான பாதுகாவலர்களும், போலீஸாரும் ஷூ வீசிய இளைஞர்களைப் பிடித்தனர். மைதானத்துக்குள் காலணி வீசியதாக ராஜ்குமார், அய்யனார், பொன்வேல் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

அப்போது அந்த இளைஞர்கள் சற்றும் அஞ்சாமல் நாம் தமிழர் கொடியை எடுத்து விரித்து பிடித்தபடி கோஷமிட்டபடி சென்றனர். படிகட்டில் இறங்கும் நேரத்தில் வடமாநில இளைஞர் ஒருவர் அவர்களைத் தாக்க முயன்றார். அவர்கள் பதிலுக்கு தாக்க முயன்ற போது போலீஸார் இழுத்துச் சென்றனர்.

இதே போல் வாலாஜா சாலையில் நுழைவு வாயில் அருகே போட்டியைக் காணவந்த இரண்டு இளைஞர்களை டிக்கெட்டைக் காட்டுங்கள் என்று கூறி பனியனை கழற்றச்சொல்லி தாக்கியதாக போலீஸார் சிலரை பிடித்தனர்.

போட்டி தொடங்கிய சில மணி நேரத்தில் மைதானம் முழுதும் குழுமி இருந்த ரசிகர்கள் செல்போனில் டார்ச்சை மொத்தமாக அடித்து தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x