Published : 13 May 2024 06:20 AM
Last Updated : 13 May 2024 06:20 AM

ஊதிய ஒப்பந்தப்படி தினக்கூலி வழங்க வேண்டும்: விரைவு போக்குவரத்து கழகத்துக்கு சிஐடியு கடிதம்

சென்னை: ஊதிய ஒப்பந்தப்படி தினக்கூலி வழங்க வேண்டும் என அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.கனகராஜ், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: விரைவு போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 684 தினக்கூலி தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு ரூ.436 தினக்கூலி வழங்கப்படுகிறது. ஆனால், தினக்கூலி தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தப்படி, ஒரு நாள் ஊதியமாக ரூ.953 வழங்கப்பட வேண்டும்.

மேலும், தொழிலாளர் நலத்துறை ஆணையர் உத்தரவுப்படி பொது போக்குவரத்தில் பணிபுரியும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டப்படி தமிழக அரசு ரூ.882 தினக்கூலியாக நிர்ணயம் செய்துள்ளது. இதைக் கூட புதிய தொழிலாளர்களுக்கு நிர்வாகம் வழங்கவில்லை.

தொழில் தகராறு சட்டப்பிரிவின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள ஊதிய ஒப்பந்தத்தை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும், குறைந்தபட்ச கூலி சட்டப்படி சம்பளம் வழங்க தொழிலாளர் ஆணையர் உத்தரவிட்ட பிறகும் அதை அமலாக்காததும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

சட்டத்தை மீறும் பொதுத்துறை: முன்மாதிரி நிறுவனமாக செயல்பட வேண்டிய மாநில அரசின் பொதுத்துறை நிறுவனமே சட்டங்களை மீறி செயல்படுவது நியாயமல்ல. எனவே, ஒப்பந்தப்படியான சம்பளத்தை வழங்க நிர்வாகம் முன்வர வேண்டும்.

இடமாற்றம்: மேலும், அனைத்து பணிமனைகளில் காலிப்பணியிடங்கள் இருந்தும் தினக்கூலி தொழிலாளர்கள் சொந்த ஊர்களில் அல்லாமல் வெவ்வேறு ஊர்களில் நியமிக்கப்பட்டிருப்பது அவர்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

இதனால் இடமாற்றம் பெற அவர்கள் லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 2013-ம் ஆண்டு சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்தபடி, கலந்தாய்வு நடத்தி அனைவருக்கும் அவரவர் சொந்த ஊர்களில் இடமாற்றம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x