

சென்னை: சென்னை மாதவரம் - சிறுசேரி இடையிலான மெட்ரோ ரயில் திட்டத்தில் அடையாறு ஆற்றின் கீழ் 56 அடி ஆழத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் 116.1 கி.மீ. தூரத்துக்கு செயல்படுத்தப்படுகிறது.
இதில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம் 45.4 கி.மீ. தூரம் கொண்டது. இந்த வழித்தடத்தில் 28 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள், 19 உயர்மட்டப் பாதை மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய உள்ளன.
இந்த தடத்தில் பசுமைவழி சாலை பகுதியில் இருந்து அடையாறு சந்திப்பு வரையிலான 1.23 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2023 பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கியது. சுரங்கம் தோண்டும் பணிகளை ‘காவிரி’, ‘அடையாறு’ ஆகிய 2 இயந்திரங்கள் அடுத்தடுத்து தொடங்கின.
இந்த இயந்திரங்கள் டிபி சாலைக்கு கீழே சுரங்கப்பாதை அமைத்து, திருவிக பாலம் அருகே அடையாறு ஆற்றை அடுத்தடுத்து அடைந்தன. தொடர்ந்து, முதல் இயந்திரமான காவிரி, அடையாறு ஆற்றை கடந்த மாதம் கடந்தது. இந்த இயந்திரம் தற்போது அடையாறு சந்திப்பை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்நிலையில், 2-வது இயந்திரமான ‘அடையாறு’, ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த இயந்திரம் அடையாறு ஆற்றை தற்போது 65 சதவீதத்துக்கு மேல் கடந்துள்ளது. தினமும் அதிகபட்சமாக 7 மீட்டர் வரை மட்டுமே சுரங்கம் தோண்டப்படுகிறது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பசுமைவழி சாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடக்கிறது. தற்போது, 2-வது சுரங்கம் தோண்டும் இயந்திரம், அடையாறு ஆற்றின் கீழ் 17 மீட்டர் ஆழத்தில், அதாவது சுமார் 56 அடி ஆழத்தில் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது அடையாறு சந்திப்பை அடுத்த மாதம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுரங்கம் தோண்டும் ‘அடையாறு’ இயந்திரம் மூலம் மொத்தம் 1,232 மீட்டர் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். இதுவரை 750 மீட்டருக்கு மேல் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் இந்த மாத இறுதியில் அடையாறு ஆற்றை கடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.