

குழந்தைகள் பிறந்தவுடன் 2 ஆண்டுகளுக்கு தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும். ஆனால், 24 சதவீதம் பெண்கள் மட்டுமே தாய்ப்பால் கொடுக்கின்றனர் என கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பிரிவு டாக்டர் எஸ்.ஜெகதீஸ்வரி தெரிவித்தார்.
உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட்1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரைகொண்டாடப்படுகிறது. இதனைமுன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய்–சேய் நல மருத்துவமனையில் தாய்ப்பால் வாரம் கொண்டாட்ட விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் பிரிவு தலைவர் டாக்டர் எஸ்.ஜெகதீஸ்வரி விழாவுக்கு தலைமை தாங்கினார். குழந்தைகள் நல பிரிவு பேராசிரியர் டாக்டர் உமாகாந்த் முன்னிலை வகித்தார். மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பேபி வசுமதி, விழாவை தொடங்கி வைத்தார்.
விழாவில், கைக்குழந்தைகளுடன் கலந்து கொண்ட பெண்களுக்கு, தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகள் பற்றி டாக்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுதொடர்பாக டாக்டர் எஸ்.ஜெகதீஸ்வரி கூறியதாவது:
தாய்ப்பாலில் அனைத்து விதமான சத்துக்களும் சரியான விகிதத்தில் இருக்கிறது. பெண்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி, ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு குழந்தைகளுக்கு ஏற்படாது. குழந்தைகள் புத்திசாலிகளாக இருப்பார்கள். குழந்தைகளின் இறப்பு விகிதமும் குறையும்.
குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதனை 30 சதவீதம் பெண்கள் மட்டுமே பின்பற்றுகின்றனர். குழந்தைக்கு 6 மாதம் வரை தொடர்ந்து தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். இதுபோல 47 சதவீதம் பெண்கள் தான் செய்கின்றனர். அதே போல குழந்தைக்கு 2 ஆண்டுகளுக்கு உணவுடன் தாய்ப்பாலும் கட்டாயம் கொடுக்க வேண்டும். ஆனால் 24 சதவீதம் பெண்கள் மட்டுமே குழந்தைக்கு 2 ஆண்டுகளுக்கு தாய்ப்பால் கொடுக்கின்றனர். டாக்டர்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே பரிந்துரைக்க வேண்டும். அதைத் தவிர பவுடர் பால், டின் பால் போன்ற செயற்கை பால்களை கொடுக்கும்படி பரிந்துரைக்கக்கூடாது என சட்டம் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.