குமரியில் அழகும், ஆபத்தும் நிறைந்த ‘லெமூர்‘ கடற்கரை: 5 ஆண்டுகளில் 21 பேர் உயிரிழந்த பரிதாபம்

லெமூர் கடற்கரையை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்.
லெமூர் கடற்கரையை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்.
Updated on
1 min read

நாகர்கோவில்: தென்னைகள் நாலாபுறமும் சூழ்ந்திருக்க, இயற்கை அளித்த கொடையாக ரம்மியமாக காட்சியளிக்கிறது ‘லெமூர்’ கடற்கரை. சுற்றுலாப் பயணிகளை சுண்டி இழுக்கும் இடமாக விளங்கினாலும், இங்கு ஆபத்துகள் நிறைந்துள்ளன. கடந்த5 ஆண்டுகளில் 21 பேர் உயிர்இழந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட லெமூர் கடற்கரைக்கு `ஆயிரங்கால் பொழிமுகம்' என்றும் பெயர் உண்டு. பழங்காலத்தில் கன்னியாகுமரிக்கு தெற்கே நிலப்பரப்பாக இருந்த லெமூரியா கண்டத்தின் நினைவாக, இந்தப் பகுதிக்கு ‘லெமூர்’ என்று பெயர் ஏற்பட்டது.

இயற்கை எழில் கொஞ்சும் இப்பகுதியில் அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர். மாலையில் சூரிய அஸ்தமனத்தை பார்க்கவும் இது சிறந்த மையமாகத் திகழ்கிறது. அதேநேரத்தில், எந்த அளவுக்கு இயற்கை எழில் சூழ்ந்த அழகிய பகுதியாக உள்ளதோ, அதே அளவுக்கு ஆபத்தும் நிறைந்துள்ளது.

இங்கு அடிக்கடி கடல் சீற்றம் ஏற்படுவதும், மழை, சூறைக்காற்று நேரங்களில் ராட்சத அலைகள் எழுவதும் வாடிக்கையாகும். அவ்வாறு எழும் ராட்சத அலைகள் பல நேரங்களில் அருகில் உள்ளகுடியிருப்புப் பகுதிகளில் நுழைந்துவிடும். இதுகுறித்த சரியான புரிதல்இல்லாததால், கடல் அலையில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 6-ம் தேதி திருச்சியில் இருந்து வந்த 5 பயிற்சி மருத்துவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. லெமூர்பகுதியில் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் கடல் அலையில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும்,சுற்றுலாப் பயணிகள் இங்கு குவிகின்றனர்.

ஆபத்தான இந்த கடற்கரையில் போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை என்றுகுற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இங்கு கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு, தற்போதுதான் எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கன்னியாகுமரி சுற்றுலா ஆர்வலர்கள் கூறும்போது, லெமூர் கடற்கரையில் கடல் சாதாரணமாக இருக்கிறது என்று கருதி, கால் நனைக்கவோ, குளிக்கவோ முடியாது. கடலை விட்டு தள்ளி கடற்கரையில் இருந்தாலும்கூட, திடீர் திடீரென கடல் அலைகள் மிக உயரமாக சீறி எழுந்து, கரைக்கு வந்து விடும். அதுவே பலரும் உயிரிழக்க முக்கியக் காரணமாகும்.

எனும், இந்த சுற்றுலா மையத்தை மூட வேண்டியது அவசியமில்லை. கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தி, பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்த வேண்டும். போலீஸாரின் கண்காணிப்புடன் மக்களை அனுமதிக்கும்போது அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பில்லை” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in