Published : 12 May 2024 06:03 AM
Last Updated : 12 May 2024 06:03 AM
வேலூர்: ஆந்திர மாநிலத்தில் நாளை சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தமிழக எல்லையோர சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம், புதுச்சேரியில் உள்ள40 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப். 19-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது
அண்டை மாநிலமான ஆந்திராவில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை (மே 13) நடைபெறுவதால், தமிழக-ஆந்திர எல்லையோர சட்டப்பேரவைத் தொகுதிகளான குடியாத்தம், காட்பாடி, கே.வி.குப்பம் ஆகிய 3 தொகுதிகளில் மட்டும் தலா ஒரு பறக்கும் படை மற்றும் ஒரு நிலை கண்காணிப்புக் குழுவினர் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வேலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக-ஆந்திர எல்லையோர சோதனைச் சாவடிகளில் வாகன சோதனைகள் நேற்றுமுன்தினம் முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
24 மணி நேரமும்... சோதனைச் சாவடிகளில் 24 மணிநேரமும் தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் வாகனங்களும், ஆந்திராவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
ஆந்திர மாநிலத்தில் தேர்தல் முடியும் வரை ஆந்திராவுக்குள் பணம், பரிசுப் பொருட்கள், மது உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தல், பதுக்கலைத்தடுக்கும் வகையில் பல்வேறுநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில், ஆந்திர மாநில எல்லையோரப் பகுதிகளில் உள்ள 8 டாஸ்மாக் மதுபானக் கடைகள் சனிக்கிழமை (நேற்று) காலை 10 மணி முதல் திங்கள்கிழமை (நாளை) நள்ளிரவு 12 மணி வரைஅடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மதுக்கடைகள் அடைப்பு: அதன்படி, வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் வி.எஸ்.புரம், மோர்தானா அணை ஆகிய 2 டாஸ்மாக் மதுபானக் கடைகளும், காட்பாடி வட்டம் எருக்கம்பட்டு, பொன்னை, சேர்க்காடு ஆகிய 3 டாஸ்மாக் மதுபானக் கடைகளும், திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டம் கொண்டகிந்தனப்பள்ளி, கொத்தூர் ஆகியமாதுபானக் கடைகளும், வாணியம்பாடி வட்டம் திம்மாம்பேட்டை மதுக்கடையும் நேற்று காலை முதல் மூடப்பட்டுள்ளன.
தடையை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர்கள் சுப்புலட்சுமி (வேலூர்), தர்ப்பகராஜ் (திருப்பத்தூர்) ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT