Published : 12 May 2024 04:04 AM
Last Updated : 12 May 2024 04:04 AM
விருதுநகர்: விருதுநகர் அருகே நேற்று முன்தினம் மாலை திடீரென வீசிய சூறைக்காற்று மற்றும் மழையால் 200-க்கும் மேற்பட்ட கொடுக்காப்புளி மரங்கள், வாழை மரங்கள் வேறோடு சாய்ந்தன.
விருதுநகர் அருகே உள்ள மருளூத்து, செட்டிபட்டி, கல்மார் பட்டி, சூலக்கரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் கொடிக்காய் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சுமார் 4 மாதங்கள் காய்க்கும் கொடுக்காப்புளி கிலோ ரூ.250 வரை விற் பனை செய்யப்படுகிறது. விருதுநகர் மாவட்டம், மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களுக்கும் கொடுக்காப்புளி அனுப்பப்பட்டு வருகிறது.
நேற்று மாலை திடீரென வீசிய சூறைக்காற்று மற்றும் மழையால் இப்பகுதியில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட கொடுக்காப்புளி மரங்கள் வேரோடு சாய்ந்தும், கிளைகள் ஒடிந்து விழுந்தும் சேதமடைந்துள்ளன. ஒவ்வொரு மரமும் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் பழமை யானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று மருளூத்து, சூலக்கரை, செட்டிபட்டி பகுதியில் சுமார் 50 ஏக்கருக்கும் மேலாக சாகுபடி செய்யப்பட்டுள்ள வாழை மரங்களும் வேரோடு சாய்ந்தன. வாழைத்தார் அறுவடை செய்யும் நிலையில், நல்ல விளைச்சல் இருந்தும் சூறைக்காற்றால் வாழை மரங் களும் சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து செட்டிபட்டியைச் சேர்ந்த விவசாயி பால்சாமி கூறியதாவது: கொடுக்காப்புளியும், வாழையும் தான் எங்களது வாழ்வாதாரம். 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுக்காப்புளி மரங்களைப் பாதுகாத்து பராமரித்து வந்தோம். ஆண்டுக்கு 4 மாத சீசன் இருக்கும்போது நல்ல விளைச்சல் கொடுக்கும். ஆனால், பல மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துவிட்டன.
சில மரங்கள் கிளைகள் ஒடிந்து சேதமடைந்துவிட்டன. வாழையும் அறுவடைக் காலத்தில் சாய்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டது. இதனை வேளாண் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கணக்கிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT