Published : 12 May 2024 04:00 AM
Last Updated : 12 May 2024 04:00 AM
திருச்சி: திருச்சி புறநகர் பகுதியில் நேற்று சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 பெண்கள் உயிரிழந்தனர்.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை திருச்சி மற்றும் சுற்றுப் பகுதியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சமயபுரத்தில் 65 மி.மீ, தேவிமங்கலத்தில் 47 மி.மீ, முசிறியில் 56 மி.மீ, துறையூரில் 19 மி.மீ மழை அளவு பதிவானது. இதேபோல, நேற்றும் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டியது.
புறநகர் பகுதியில் சூறைக் காற்றுடன் பெய்த மழையில், அந்தநல்லூர், பேட்டைவாய்த்தலை, பெருகமணி, சிறுகமணி, திருப்பராய்த்துறை, புலிவலம், சோமரசம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைக்கன்றுகள் சேதமடைந்தன. இதற்கு உரிய கணக்கெடுப்பு நடத்தி, இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, சோமரசம்பேட்டையை அடுத்த எட்டு மாந்திடல் பகுதியில் ஒரு வாழைத்தோப்பில் அறுந்து கிடந்த மின் கம்பியை, அங்கு வேலை செய்து கொண்டிருந்த மல்லியம் பத்து கொசவந்திடல் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி செல்வி(48), சக்திவேல் மனைவி ராதிகா (44) ஆகியோர் தெரியாமல் மிதித்து விட்டனர். இதில், மின்சாரம் பாய்ந்து 2 பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT