Published : 23 Aug 2014 10:33 AM
Last Updated : 23 Aug 2014 10:33 AM

கும்பகோணம் பள்ளி நிறுவனர், தாளாளர் உட்பட 4 பேர் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்த வழக்கில் பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உட்பட 4 பேர் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க விசாரணை அதிகாரிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் 2004 ஜூலை 16-ம் தேதி நடந்த கோர தீவிபத்தில் அந்தப் பள்ளியில் பயின்ற 94 குழந்தைகள் உயிரிழந்தனர். பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தஞ்சை மாவட்ட நீதிபதி முகமது அலி ஜூலை 30-ம் தேதி தீர்ப்பளித்தார்.

இதில் பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை யும், அவரது மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலெட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலெட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகியோருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாலாஜி, பொறி யாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்ளிட்ட 4 பேரும் தண் டனையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

பழனிச்சாமியின் மனுவில், தீ விபத்துக்கு பள்ளி நிர்வாகம்தான் காரணம் என்பதற்கான ஆவணங்களை போலீஸார் தாக்கல் செய்யவில்லை. பள்ளி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அரசு தரப்பு ஆவணங்களில் முரண்பாடுகள் உள்ளன. பள்ளியின் சமையல் அறையில் தீப்பிடித்ததில் விபத்து நடந்துள்ளது. மதிய உணவுத் திட்டம் மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் நடைபெறுகிறது. சத்துணவுப் பணியாளர்கள் பள்ளி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. மேலும் அரசு தரப்பில் நடந்த சம்பவம் விபத்து எனக் கூறப்பட்டுள்ளது. தீ விபத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. கீழ் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுக்களுக்கு விசாரணை அதிகாரியான தஞ்சை துணை கண்காணிப்பாளர் 3 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x