“தன்னலமற்ற தொண்டு மறக்கவியலாது” - முதல்வர் ஸ்டாலின் ‘செவிலியர் தின’ வாழ்த்து

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: “மருத்துவத் துறையில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்வதில் நமது செவிலியர்களின் பங்கும் சேவையும் அளப்பரியது. கோவிட் பெருந்தொற்றின் போது அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற தொண்டை நாம் என்றும் மறக்கவியலாது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் “உலக செவிலியர்” தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “செவிலியர்களின் முன்னோடியான ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான மே 12 ஆண்டுதோறும் உலக செவிலியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. கிரீமியப் போரின்போது காயமடைந்த வீரர்களைப் பராமரிப்பதில் நைட்டிங்கேல் அம்மையாரின் தன்னலமற்ற அர்ப்பணிப்பும், துணிவும் இன்றைய செவிலியர் சேவைக்கு அடித்தளமிட்டது. அதை நினைவுகூரும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.

மருத்துவத்துறையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்வதில் நமது செவிலியர்களின் பங்கும் சேவையும் அளப்பரியது. கோவிட் பெருந்தொற்றின் போது அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற தொண்டை நாம் என்றும் மறக்கவியலாது. அத்தகைய செவிலியர்களின் தொண்டினைப் போற்றும் வகையில், அரசு பொறுப்பேற்ற பின் அவர்கள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

  • 1,412 ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
  • ஒப்பந்த செவிலியர்களுக்கான ஊதியம் ரூ.14,000/-லிருந்து ரூ.18,000/- ஆக உயர்த்தப்பட்டது.
  • மருத்துவப்பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,912 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தர செவிலியர்களாகப் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.
  • மக்களைத் தேடி மருத்துவம் எனும் மகத்தான திட்டத்தின் மூலம் 2,650 பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள் ஊக்கத் தொகையாக மாதம் ரூ.5,100/- நிலையான ஊதியம் பெறுகின்றனர்.
  • வெளிப்படையான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள் மூலம் 9,535 செவிலியர்கள் அவரவர் விரும்பிய இடங்களுக்கே பணிமாறுதல்கள் பெற்றுள்ளனர்.
  • செவிலியர்கள் பதவி உயர்வு பெறும் பொருட்டு செவிலியர் படிப்புகளின் தரத்தினை மேம்படுத்தும் வகையில் பச்சிளங்குழந்தை பராமரிப்பு மற்றும் அதிதீவிர சிகிச்சை ஆகிய பிரிவுகளில் ‘போஸ்ட் பேசிக் டிப்ளமோ’ செவிலியர் பயிற்சிப் பிரிவுகள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மக்கள் நலனில் செவிலியர்களின் பெரும்பங்கினைப் பாராட்டி அவர்களின் தொண்டு மேன்மேலும் வளர, உலக செவிலியர் நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in