சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற அமைச்சர் பொன்முடிக்கு மேலும் இருவாரம் அவகாசம்

சொத்து குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற அமைச்சர் பொன்முடிக்கு மேலும் இருவாரம் அவகாசம்
Updated on
1 min read

புதுடெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெற மேலும் இருவாரம் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது தமிழக உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகிக்கும் க.பொன்முடி கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலகட்டத்தில் உயர்கல்வித்துறை மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பதவிவகித்தார்.

அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.72 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2011-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

3 ஆண்டுகள் சிறை: இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசா லாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் தலா ரூ. 50லட்சம் அபராதம் விதித்து கடந்தஆண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தும், பொன்முடியை குற்றவாளி என அறிவித்த தீர்ப்புக்கு தடை விதித்தும் உத்தரவிட்டது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற ஒரு மாதம் அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டது.

பொன்முடி தரப்பு மனு: இந்நிலையில், விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென பொன்முடி தரப்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, அமைச்சர்பொன்முடி விழுப்புரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்து ஜாமீன் பெறுவதற்கான அவகாசத்தை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in