Published : 18 Apr 2018 03:42 PM
Last Updated : 18 Apr 2018 03:42 PM

சூளைமேட்டில் இளம்பெண் கொலை: உடலை சாக்குமூட்டையில் கட்டி மறைத்து வைத்த இளைஞர்

சூளைமேட்டில் இளம்பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். அவரது உடலை சாக்கு மூட்டையில் கட்டி மறைத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரில் வசித்தவர் வேல்விழி(19). நர்சிங் டிப்ளமோ படித்து வந்தார். இவரது சொந்த ஊர் விருத்தாச்சலம். படிப்பதற்காக சென்னை வந்தவர் சூளைமேட்டில் தங்கி படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 6-ம் தேதி தனது தந்தையுடன் கடைசியாக பேசிய வேல்விழி பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை. அவரது தந்தை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதனால் பதற்றமடைந்த அவர் சென்னை வந்து வேல்விழி தங்கி இருந்த இடத்தில், அவரது பணியிடத்தில் விசாரித்தபோது யாரும் அவரை பார்க்கவில்லை என்றனர். இதனால் வேல்விழி என்ன ஆனார் என்று தெரியாமல் அவரை தேடி கண்டுபிடித்து தரும்படி வேல்விழியின் தந்தை ராஜேந்திரன் சூளைமேடு காவல்நிலையத்தில் கடந்த 9-ம் தேதி புகார் அளித்தார்.

புகாரைப்பெற்ற போலீஸார் அவர் காணாமல் போனது குறித்து வேல்விழி வசித்த குடியிருப்பு, அவர் பணியாற்றிய நர்சிங் ஹோம் பகுதியில் விசாரித்தனர். வேல்விழியின் அக்கம் பக்கம் வசிப்பவர்களையும் விசாரித்தனனர். அப்போது வேல்விழியுடன் நர்சாக பணியாற்றும் மகாலட்சுமி என்பவரின் கணவர் அஜித்குமார் என்பவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அஜித்குமார் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அஜித்குமாரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் மறுத்த அவர் போலீஸார் கவனிக்கும் விதத்தில் கவனித்தபின்னர் உண்மையை ஒப்புக்கொண்டார். அவரது வாக்குமூலத்தில் வேல்விழியை கொன்றது நான் தான் என ஒப்புக்கொண்டார்.

கொன்றாய் சரி உடல் எங்கே என்று கேட்டபோது வேல்விழியை கொன்று அவரது உடலை சாக்குமூட்டையில் வைத்து ஒரு வாடகை ஆட்டோ பிடித்து கோயம்பேடு கொண்டுச்சென்றேன். அங்கு ஆளரவம் இல்லாத ஒரு இடத்தில் மின்சார கேபிள்களை சுற்றும் பெரிய உருளை இருந்தது, அதன் இடையில் உள்ள இடைவெளியில் திணித்துவிட்டு வந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

உடனடியாக அவரை அழைத்துக்கொண்டு அங்குச்சென்ற போலீஸார் அவர் அடையாளம் காட்டிய இடத்தில் வேல்விழியின் உடல் சாக்குமூட்டையில் வைத்து திணிக்கப்பட்டிருப்பதை மீட்டனர். உடல் பலநாட்களாக அங்கு இருந்ததால் அழுகி அந்தப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசியது.

போலீஸார் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அஜித்குமாரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அஜித்குமாரின் மனைவியும் அஜித் குமாரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அஜித்குமார் பாலக்காட்டை சேர்ந்தவர். மூன்று மாதத்திற்கு முன் சென்னைக்கு வந்துள்ளனர். அஜித்குமாரின் மனைவி மகாலட்சுமி விருகம்பாக்கத்தில் நர்சாக பணியாற்றுகிறார்.

அவருடன் வேல்விழியும் பயிற்சி நர்சாக பணியாற்றிவந்தார். நர்சிங்ஹோம் அனைவருக்கும் சூளைமேட்டில் ஒரே குடியிருப்பில் இடம் பிடித்து தங்க வைத்துள்ளது. அஜித்குமார் சோம்பேறி, வேலைக்கு போகாமல் ஊர்சுற்றி வருகிறார். இரண்டு மாதம் அங்கே இங்கே கடன் வாங்கி மனைவியிடம் சம்பளம் என்று கொடுத்துள்ளார்.

மூன்றாம் மாதம் சம்பளம் கொடுக்க கடன் யாரும் தரவில்லை. கடந்த 6-ம் தேதி ரூமில் தனியாக இருந்த வேல்விழியிடம் பணம் கடன் கேட்டபோது அவர் தரவில்லை, கழுத்தில் உள்ள செயின் அல்லது செல்போனை கொடு நான் இரண்டு மாதத்தில் திருப்பி தருகிறேன் என்று கேட்டபோது தரமறுத்த வேல்விழி திட்டி வெளியே போகச்சொல்லி இருக்கிறார்.

வேல்விழி அதற்கு கேவலமாக பேசியதால் ஆத்திரமடைந்து  துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக அஜித்குமார் தெரிவித்துள்ளார். பின்னர் உடலை தனது அறைக்கு கொண்டுவந்து கிடத்திவிட்டு அருகில் உள்ள மளிகைக்கடைக்குச்சென்று பிளாஸ்டிக் சாக்கு ஒன்றை வாங்கி அதில்வேல்விழி உடலை கிடத்தி தைத்து ஆட்டோ ஒன்றை பிடித்து கோயம்பேட்டிற்கு சரக்கு கொண்டு போவது போல் கொண்டுச்சென்றுள்ளார்.

பின்னர் வேல்விழி கழுத்தில் இருந்த இரண்டு சவரன் செயினை அரும்பாக்கத்தில் உள்ள நகைக்கடையில் விற்று மனைவியிடம் சம்பளமென்று கொடுத்துவிட்டு மீதிப்பணத்தில் ஜாலியாக செலவு செய்துள்ளார். மற்றவர்கள் வேல்விழியை தேடும்போது அஜித்குமாரும் அப்பாவிபோல் தேடியுள்ளார்.ஆனால் போலீஸின் கழுகுப்பார்வையிலிருந்து தப்ப முடியாமல் சிக்கிக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x