Published : 11 May 2024 05:35 AM
Last Updated : 11 May 2024 05:35 AM
சென்னை: சென்னை மாநகரப் பகுதிக்குள் செல்லப் பிராணிகளின் உரிமத்தை ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மாநகராட்சியில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்கு உரிமம் பெறுவது கட்டாயம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் தங்களது செல்லப் பிராணிக்கு உரிமம் பெற ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
பலர் மாநகராட்சி அலுவலகங்களை அணுகி வருகின்றனர். இந்த சேவையை இணையதளம் வழியாகவும் பெறலாம் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் இணையதள சேவைகள் (OnlineServices) என்பதைத் தேர்வு (Click)செய்ய வேண்டும். பின்னர் அதில்வரும் பல சேவைகளில் செல்லப் பிராணிகளின் உரிமம் (Pet Animal License) என்பதைத் தேர்வு செய்யவேண்டும். பின்னர் New user என்பதைத் தேர்வு செய்து அதில் தங்களதுவிவரங்களை உள்ளீடு செய்து, 4இலக்க எண்ணை (Pin Number) உள்ளீடு செய்ய வேண்டும்.
இதைத் தொடர்ந்து தங்களது கைபேசி எண்ணையும், 4 இலக்க எண்ணையும் (Pin Number) பயன்படுத்தி உள் நுழைந்து, புதிய செல்லப் பிராணிகளின் உரிமம் (New Pet Registration) என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். செல்லப் பிராணிகளின் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து உரிமையாளரின் புகைப்படம், முகவரி சான்றின் புகைப்படம், செல்லப் பிராணியின் புகைப்படம், ஓராண்டுக்குள்ளாக வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றின் புகைப்படம் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து உறுதிமொழி (Declaration) அளித்த பின்னர் சமர்ப்பிக்க (Submit) வேண்டும்.
இந்த விவரங்களைச் சம்பந்தப்பட்ட மண்டல கால்நடை உதவி மருத்துவர் சரிபார்த்து அங்கீகரித்த பின்னர்பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு பணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன்பிறகு உரிமையாளர்கள் மாநகராட்சிஇணையதளத்தில் இணைய வழியில்ரூ.50 பணம் செலுத்த வேண்டும்.
அதன் பிறகு செல்லப் பிராணிகளின்உரிமம் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு (Link) உருவாகும். அதைக் கொண்டு செல்லப் பிராணிகளின் உரிமத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட செல்லப் பிராணிகள் வளர்ப்போர் ஆண்டுதோறும் புதுப்பிக்க வேண்டும். இணையவழியிலும் புதுப்பித்துக்கொள்ளலாம். தவறும் பட்சத்தில் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT