மயிலாப்பூர் கோயில் சிலை திருட்டு வழக்கில் குற்ற பத்திரிகையை ரத்து செய்ய முடியாது: நீதிமன்றம் உத்தரவு

மயிலாப்பூர் கோயில் சிலை திருட்டு வழக்கில் குற்ற பத்திரிகையை ரத்து செய்ய முடியாது: நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

மதுரை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில், ராகு, கேது சிலைகள் திருடப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் புன்னைவனந்தர் சந்நிதியில் இருந்த கற்கள் பதிக்கப்பட்ட பழமையான மயில் சிலையும், ராகு,கேது சிலைகளும் திருடப்பட்டன. இதுகுறித்த புகாரின் பேரில் கோயில் செயல் அலுவலராக இருந்த திருமகள் உள்ளிட்ட 7 பேர் மீது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கும்பகோணம் கூடுதல் தலைமை நீதித் துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி திருமகள் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி நாகார்ஜுன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ``சாட்சிகள் முறையாக விசாரிக்கப்படாமல், அவசரகதியில் விசாரணை முடிக்கப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால், குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர்களால் திருடப்பட்ட சிலைகள் 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எனவே மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது. அதேநேரத்தில் மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்ட இபிகோ 201 (குற்றவாளியை காப்பாற்றும் நோக்குடன் தனக்கு தெரிந்த தகவலை மறைப்பது அல்லது பொய்யான தகவலை தரும் குற்றத்துக்கான) பிரிவு ரத்து செய்யப்படுகிறது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இதே கோரிக்கை தொடர்பாக கபாலீஸ்வரர் கோயில் தலைமை ஸ்தபதி முத்தையா, அறநிலையத் துறை இணை ஆணையர் தனபால், கோயில் ஊழியர்கள் பாலு, மகேஷ் ஆகியோரும் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in