Published : 11 May 2024 06:09 AM
Last Updated : 11 May 2024 06:09 AM
சென்னை: சென்னையில் நேற்றிரவு தென்பட்ட சர்வதேச விண்வெளி நிலையத்தை வெறும் கண்களால் பொதுமக்கள், அறிவியல் ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர்.
உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்போடு விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் இந்த செயற்கை விண்வெளி நிலையத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அதன்படி சர்வதேச விமானக் குழுக்கள், ஏவுகணை, வாகனங்கள், விமான செயல்பாடுகளின் பயிற்சி, பொறியியல் மற்றும் மேம்பாட்டு வசதிகள், தகவல் தொடர்பு, சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி ஆகியவற்றின் செயல்பாடுகள் இந்த விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதாவது, மணிக்கு சுமார் 28 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை சுற்றிவரும் இந்த சர்வதேச விண்வெளி மையம் தினமும் பூமியை 15.5 முறை வலம் வருகிறது. அவ்வாறு விண்வெளி மையம் சுற்றி வருகையில் சில நேரங்களில் பூமிக்கு மிக அருகில் வருவதுண்டு.
அப்போது அவற்றை வெறும் கண்களால் பார்க்க முடியும். அதன்படி சென்னையில் இருந்து மிக அருகில் சுமார் 400 கிலோ மீட்டர் உயரத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நேற்று கடந்து செல்லும் என்று அமெரிக்காவின் நாசா அறிவித்திருந்தது. அதன்படி நேற்றிரவு தென் மேற்கு திசையில் இரவு 7.09 முதல் 7.16 மணி வரை சுமார் 7 நிமிடங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் கடந்து செல்வதை காண முடிந்தது.
இந்த காட்சியை பொதுமக்கள், அறிவியல் ஆர்வலர்கள் கண்டு ரசித்தனர். அப்போது வானில் நட்சத்திரம் நகர்வதை போன்று அந்த நிகழ்வானது இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT