

சென்னை: வருமான வரி செலுத்துவோர் தங்களது குறைகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தீர்க்கும் சேவையை வருமானவரித் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
‘குறை தீர்க்கும் மாதம்’ - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரி முதன்மை தலைமை ஆணையர் அலுவலகம் சார்பில்,வரி செலுத்துவோர் தாக்கல் செய்யும் குறைகளை விரைவாக தீர்வு காண்பதற்காக, வருமானவரித் துறை கடந்த மாதம் 22-ம் தேதி முதல் இம்மாதம் 22-ம் தேதி வரை ஒரு மாதத்துக்கு ‘குறை தீர்க்கும் மாதமாக' அனுசரிக்கிறது.
இந்த மாதத்தில், ‘சிபிகிராம்’ மற்றும் ‘இ-நிவாரண்’ ஆகிய தளங்கள் மூலம் இணைய வழியாகவும் மற்றும் பிற முறைகளின் மூலமாகவும், வரி செலுத்துவோர் தாக்கல் செய்யும் குறைகளை விரைவாக தீர்ப்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
மேலும், வரி செலுத்துவோர் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் விரும்பினால், தங்கள் அதிகார வரம்பு மதிப்பீட்டு அதிகாரிகள் மற்றும் அவர்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து குறைகளுக்குத் தீர்வு காணவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மூத்த அதிகாரிகள் குழு: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தில் உள்ள அனைத்து வருமானவரி அலுவலகங்களிலும் வரி செலுத்துவோர் மற்றும் அவர்களின் பிரதிநிதிகளை, அதிகார வரம்புக்கு உட்பட்ட வருமானவரி முதன்மை ஆணையர் அலுவல கத்தின் மூத்த அதிகாரி மற்றும் அவரது குழுவினர், ஏப்ரல் 24-ம்தேதி முதல் மே 22-ம் தேதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை சந்தித்து குறை களைப் பெற்று, அதை தீர்க்க வழி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரி செலுத்து வோர் தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு தங்களது குறைகளுக்குத் தீர்வு காணலாம். இதன்படி, 94454 67500 என்ற மொபைல் எண்ணில் தொடர்புகொண்டு தங்களது குறைகளுக் குத் தீர்வு காணலாம்.
இத்தகவல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரி முதன்மை தலைமை ஆணையர் அலுவலக இணை ஆணையர் பி.எம்.செந்தில் குமார் வெளியிட்ட செய்திக் குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.