Published : 05 Apr 2018 11:29 AM
Last Updated : 05 Apr 2018 11:29 AM

சர்க்கரை நோயால் இளைஞர்கள் அதிகம் பாதிப்பு: அரசு பொது மருத்துவமனை டாக்டர் தர்மராஜன் தகவல்

சர்க்கரை நோயால் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை அரசு பொது மருத்துவமனை சர்க்கரை நோய் உயர்நிலைத் துறை இயக்குநர் டாக்டர் ப.தர்மராஜன் தெரிவித்தார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் பொதுமக்கள் - டாக்டர்கள் இடையே சுமுக உறவை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்ச்சி, சர்க்கரை நோய் உயர்நிலைத் துறை இயக்குநர் டாக்டர் ப.தர்மராஜன் தலைமையில் நடைபெற்றது. டாக்டர் பெரியாண்டவர் சர்க்கரை நோயின் விளைவுகள், தடுக்கும் முறைகள் குறித்தும், டாக்டர் ரஞ்சித் பிரதாப், நோயை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பற்றியும், உணவு நெறிமுறையாளர் சுஜாதா, உணவுக் கட்டுப்பாடு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்தும் விளக்கினர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்களின் சர்க்கரை நோய் தொடர்பான கேள்விகளுக்கு, துறை சார்ந்த டாக்டர் கள் பதில் அளித்தனர்.

சர்க்கரை நோய் குறித்து சர்க்கரை நோய் உயர்நிலைத் துறை இயக்குநர் டாக்டர் ப.தர்மராஜன் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலேயே இந்த மருத்துவமனையில்தான் சர்க்கரை நோய் உயர்நிலைத் துறை உள்ளது. மற்ற அரசு மருத்துவமனைகளில் சர்க்கரை நோய் துறை செயல்படுகிறது. இந்த மருத்துவமனைக்கு வரும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த முறையில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் சர்க்கரை நோயாளி களுக்கு இலவச மாத்திரை, மருந்துகள் வழங்கப்படுகின்றன. இன்சுலின் ஊசியும் போடப்படுகிறது.

நான்கு வகை

சர்க்கரை நோய் 4 வகைகளைக் கொண்டது. 15 வயதுக்குள் வருவது, 40 வயதுக்கு மேல் வருவது, பேறுகாலத்தில் வருவது, தேவையில்லாத மாத்திரை, மருந்துகள் மற்றும் கணையம் பாதிப்பால் வருவதாகும். 15 வயதுக்குள் வரும் சர்க்கரை நோய்க்கு மாத்திரை, மருந்துகள் இல்லை. வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டு வாழ வேண்டும்.

40 வயதுக்குள் மேல் வரும் சர்க்கரை நோய்க்கு மாத்திரை, மருந்துகள் இருக்கின்றன. அதுவும் 10 முதல் 15 ஆண்டுகள் வரைதான் பயன்படுத்த முடியும். அதன்பின்னர் இன்சுலின் ஊசிதான் போட்டுக்கொள்ள வேண்டும். பேறுகால சர்க்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி மட்டுமே பயன்படுத்த முடியும். கணையம் பாதிப்பு போன்ற பிறவகை சர்க்கரை நோயாளி களுக்கு மாத்திரை மருந்து மற்றும் இன்சுலின் ஊசி போட வேண்டியதிருக்கும்.

நமது நாட்டில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 40 வயதுக்கு மேல் வரும் சர்க்கரை நோய், தற்போது 25, 35 வயதில் வரத் தொடங்கியுள்ளது. அதிக அளவில் இளைஞர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு மரபணு பிரச்சினை, உடல் பருமன், உணவு பழக்க வழக்கத்தில் மாற்றம், மன அழுத்தம் முக்கிய காரணங்களாகும்.

சர்க்கரையின் அளவு

சர்க்கரை நோய் பரிசோதனையின்போது சாப்பிடுவதற்கு முன்பு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 100-க்கு கீழேயும், சாப்பிட்ட பின்னர் 140-க்கு கீழேயும் இருந்தால் சர்க்கரை நோய் இல்லை என்பதாகும். அதுவே சாப்பிடுவதற்கு முன்பு 126-க்கும் மேலேயும், சாப்பிட்ட பின்னர் 200-க்கும் மேலேயும் இருந்தால் சர்க்கரை நோய் இருக்கிறது என்று பொருளாகும். அதுவே சாப்பிடுவதற்கு முன்பு 100-ல் இருந்து 126-க்குள்ளும், சாப்பிட்ட பின்னர் 140-ல் இருந்து 200-க்குள்ளும் இருந்தால் சர்க்கரை நோய் வருவதற்கான முந்தைய நிலையாகும்.

சர்க்கரை நோய் வருவதற்கான முந்தையை நிலையை முறையான சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும். ஆனால் சர்க்கரை நோய் வந்துவிட்டால் முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் கட்டுப்படுத்த முடியும். பின்விளைவுகள், பக்க விளைவுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும்.

அறிகுறிகள்

சர்க்கரை நோய் வந்திருப்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டு பிடிக்கலாம். அடிக்கடி தாகம் எடுத்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், நாக்கு வறண்டு போகுதல், உடல் எடை குறைதல் போன்றவை அறிகுறிகளாகும். 50 சதவீதம் பேருக்கு மட்டும் அறிகுறிகள் காணப்படும். பரிசோதனை செய்து கொள்வதன் மூலமே சர்க்கரை நோய் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். இவ்வாறு தர்மராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x